கசந்த திருமணமும் முடிந்த காதலும்.. ஒன்றாகத் தங்கிய காதல் ஜோடி சடலங்களாக மீட்பு.. சென்னையில் பயங்கரம்!!
பாரதி பெருமாளும் பவ்யாவும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். எனினும், இவர்களின் காதலுக்குச் சாதி ரீதியான எதிர்ப்புகள் இருந்ததால், இரு வீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பவ்யாவிற்கு அவரது பெற்றோர் சம்மதத்துடன் வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது.

பாரதி பெருமாள், பவ்யா
சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், நர்சிங் மாணவி ஒருவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரது காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதி மறுப்புக் காதல் மற்றும் கசந்த திருமண வாழ்க்கை இந்தத் துயர முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை பெரியமேடு, குமாரப்பா தெருவில் உள்ள ஒரு விடுதியில், கடந்த 23-ஆம் தேதி ஒரு ஜோடி தங்கியிருந்தது. நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், கதவைத் தட்டிப் பார்த்தனர்.
இதையும் படிக்க: சென்னையில் LPG எரிவாயு தட்டுப்பாடு.. தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்.. வாழ்வாதாரம் பாதிப்பதாக வேதனை!!
பூட்டிய அறையில் கிடந்த சடலம்:
உள்ளே இருந்து எந்தப் பதிலும் வராததால், கதவின் சாவித் துவாரம் வழியாகப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். உள்ளே இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்க, வாலிபர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்த பெரியமேடு காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் துணை ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று உடல்களை மீட்டனர். காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. இளம்பெண் பவ்யா (21), சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். இவர் வடபழனியில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. இறுதியாண்டு பயின்று வந்தார். வாலிபர் பாரதி பெருமாள் (21), சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
காதலும் கசந்த திருமணமும்:
பாரதி பெருமாளும் பவ்யாவும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். எனினும், இவர்களின் காதலுக்குச் சாதி ரீதியான எதிர்ப்புகள் இருந்ததால், இரு வீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பவ்யாவிற்கு அவரது பெற்றோர் சம்மதத்துடன் வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், அந்தத் திருமண வாழ்க்கை கசந்ததால், கணவரைப் பிரிந்து படிப்பைத் தொடர பவ்யா மீண்டும் சென்னை வந்துள்ளார். அப்போது பாரதி பெருமாளை மீண்டும் சந்தித்துப் பழகத் தொடங்கியுள்ளார்.
கொலை, தற்கொலை:
சம்பவத்தன்று விடுதி அறையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. போலீஸாரின் முதற்கட்ட முடிவுகளின்படி, பாரதி பெருமாள், பவ்யாவிற்குத் தெரியாமல் உணவில் விஷம்கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பவ்யா மயங்கிய நிலையில் இருந்தபோது, புதிதாக வாங்கப்பட்ட பிளேடால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் உயிர்வாழ விரும்பாமல், அதே அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து பிளேடு மற்றும் எலி மருந்து பாட்டில்களைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..
விசாரணை தீவிரம்:
உயிரிழந்தவர்களின் உடல்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகவலறிந்து வந்த உறவினர்கள் உடல்களைப் பார்த்து கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது. இந்தச் சம்பவம் குறித்து பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.