‘கை நம்மைவிட்டு போகாது’ காங்கிரஸ் – தவெக கூட்டணி? உதயநிதி ஸ்டாலின் பளீச்!
Udhayanidhi Stalin On Congress : கை நம்மை விட்டு போகாது என்று காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
திண்டுக்கல், அக்டோபர் 09 : கை நம்மை விட்டு போகாது என்று காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜக அரசுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி என்ற அடிமை கிடைத்துள்ளார் என்றும் மேலும் புது அடிமைகளை தேடி வருகிறார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளை போட்டு வருகின்றனர். முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்து விட்டார். அதே நேரத்தில், தான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதிலும் விஜய் உறுதியாக இருக்கிறார்.
ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக மீதான அரசியல் கணக்குகள் மாறியிருக்கின்றன. கரூர் விஷயத்தில் பாஜக, அதிமுக விஜய்க்கு சாதகமாகவே பேசி வருகிறது. இதனால், விஜயை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சித்து வருகிறது. மேலும், ராகுல் காந்தியுடன் விஜய் தொலைபேசியில் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தவெக காங்கிரஸ் கூட்டணி அமையும் என கூறி வருகின்றனர். காங்கிரஸ் கேட்கும் கூடுதல் இடங்களை திமுக தராது. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு இருக்காது. இதனால், தவெக காங்கிரஸ் கூட்டணி அமையும் என கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
Also Read : சோஷியல் மீடியாவில் விஜய் டாப்.. ஸ்டாலின், உதயநிதி கம்மி தான்.. இபிஎஸ் நிலை இதுதான்!
‘கை நம்மைவிட்டு போகாது’
இந்த நிலையில், காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “உங்கள் எழுச்சி, அன்பை பார்க்கையில், முழுதாக மேடை ஏறுவோமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. என்னுடைய கைகள் உடன் வருவேனா அல்லது முழுதாக வருவேனா என்றெல்லாம் சந்தேகம் எற்பட்டது.
Also Read : திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா.. பின்னணி என்ன?
ஆனால், என்றுமே கை நம்மை விட்டு போகாது. நான் என்னுடைய கையை சொன்னேன். கை மீது இருக்கும் நம்பிக்கையை கூறினேன். பாஜகவுக்கு அதிமுக என்ற அடிமை கிடைத்துள்ளது. புது அடிமை கிடைக்குமா என பாஜக தேடுகிறது. புது அடிமைகள் கிடைக்கும். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது” என்று சூசகமாக தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக – காங்கிரஸ் கூட்டணி அமையும் என தகவல்கள் வெளிவரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.