விஜய் – பரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை?

Parveen Chakravarty - Vijay meet: காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சென்னையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.

விஜய் - பரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை?

விஜய், பரவீன் சக்கரவர்த்தி, செல்வப்பெருந்தகை

Updated On: 

06 Dec 2025 11:55 AM

 IST

சென்னை, டிசம்பர் 06: காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பரவீன் சக்கரவர்த்தி (Praveen Chakravarty) தவெக தலைவர் விஜய்யை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் வைத்து நடந்த சந்திப்பில் பரவீன் சக்கரவர்த்தி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, ராகுல் காந்தியின் ஆலோசனையின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாகவும், பரவீன் சக்கரவர்த்தி ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருப்பவர் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இதனால், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் அணி மாற முயற்சிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க: விஜய்யுடன் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பேச்சுவார்த்தை.. தமிழக அரசியலில் பரபரப்பு!!

ஐவர் குழு அமைப்பு:

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கூட்டணியை இறுதி செய்வது, போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்வது, வேட்பாளர்களை இறுதி செய்வது என பல்வேறு பணிகளும் தீவிரமெடுத்துள்ளன. அந்தவகையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்த முறை தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இத்தகவலை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இதனிடையே, தேசிய காங்கிரஸ் தரப்பில், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அண்மையில் முதல்வர் மு..ஸ்டாலினை அறிவாலயத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் மூலம் கூட்டணி குறித்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறிய செல்வப்பெருந்தகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்றும் தெரிவித்திருந்தார்.

ஒருமணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை:

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, சென்னையில் நேற்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தற்போது வரை இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்பது குறித்து இருதரப்பிலும் விளக்கமளிக்கவில்லை. அதேசமயம், சந்திப்பு நடக்கவில்லை என்றும் இரு தரப்பும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால், வரும் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது சந்தேகம் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

செல்வப்பெருந்தகை பரபரப்பு விளக்கம்:

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் பரவீன் சக்கரவர்த்திவிஜய் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, அதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அவ்வாறு அவர் பரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், அதுபற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றும் மழுப்பலாக பதிலளித்தார்.

மேலும் படிக்க: விஜய்யின் பொதுக்கூட்டம் எப்போ தெரியுமா? அனுமதி கேட்டு தவெக சார்பில் விண்ணப்பம்

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடப்பது மட்டுமே தெரியும்:

இந்தியா கூட்டணி இரும்புகோட்டை போல் வலிமையாக உள்ளதாகவும், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை அமைக்க ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 பேரும் முதல்வர் மு..ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளோம் என்று கூறிய அவர், மாநிலத் தலைவரான தனக்கு வேறு தகவலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகவும், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது மட்டும் தான் தனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..
ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. புத்தாண்டில் வருகிறது புதிய வசதி!
லாட்டரி மூலம் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்
ஓய்வு குறித்து முதன்முறையா மனம் திறந்த கமல்ஹாசன்!