நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் கொடூர தாக்குதல்.. ஒருவர் பலி
Tirunelveli Railway Station Attack: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் பயணிகளின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நெல்லை ரயில் நிலையம்
திருநெல்வேலி, செப்டம்பர் 17: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் காந்திருந்த பயணிகள் மீது வடமாநில இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஒன்றாக திகழும் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதன் வழியாகத்தான் திருச்செந்தூர், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, கேரள மாநிலம் கொல்லம், திருவனந்தபுரம், மும்பை, ஜம்மு காஷ்மீர் வரை ரயில்கள் இயக்கப்படுவதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தினசரி இரவு நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும், தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் 10:30 மணிக்கு மேல் திருநெல்வேலி ரயில் நிலையம் வந்து செல்வது வழக்கம்.
பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்
இப்படியான நிலையில் நேற்று (செப்டம்பர் 16) இரவு நடைமேடை 3 மற்றும் 4ல் கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கட்டையைக் கொண்டு பயணிகளை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் ரயில் நிலையம் பரபரப்பாக மாறியது. உடனடியாக தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
Also Read: பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் .. பேருந்தில் மோதி பலி
இதற்கிடையில் காயமடைந்த பயணிகளை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு போலீசார் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இவர்களை தாக்கிய அந்த வட மாநில இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மறைந்தார். உடனடியாக ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் இணைந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தேடினர்.
இந்த நிலையில் வடமாநில இளைஞர் ஒருவர் கையில் ரத்தக்கரை தோய்ந்த கட்டையுடன் தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகில் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
Also Read: மகள் திருமணத்தன்று தாய்க்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் மூழ்கிய கிராமம்
ஒருவர் உயிரிழப்பு
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை பிடித்து ரயில்வே இரும்பு பாதை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதே சமயம் காயமடைந்த மூன்று நபர்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டது. அதன்படி கோவையைச் சேர்ந்த தங்கப்பன், தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சியை சேர்ந்த பாண்டித்துரை, கேரளாவைச் சேர்ந்த பிரசாத் என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இவர்களில் கோவையைச் சேர்ந்த தங்கப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் பிடிபட்ட வட மாநில இளைஞரிடம் விசாரணை நடைபெற்ற போது அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்பது தெரிய வந்தது. அவர் எதற்காக இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தினார் என்ற ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சூரஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல செயல்படுவதாக தகவலும் வெளியாகியுள்ளது. அதே சமயம் உயிரிழந்த தங்கப்பன் குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் குறித்தும் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.