Tirunelveli: பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் .. பேருந்தில் மோதி பலி
Tirunelveli Bike Accident: திருநெல்வேலியில் நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர். செப்டம்பர் 7 அன்று அதிகாலையில் அரசு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. பைக்கில் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சாலையில் செல்லும் போது மிதமான வேகத்தில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி, செப்டம்பர் 8: திருநெல்வேலியில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசிக்கு செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலையில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்குள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது டவுணில் பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி ஒரே பைக்கில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். மேம்பாலத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக பைக் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதறிப்போன ஓட்டுநர், நடத்துநர்
விபத்து நடந்தவுடன் பதறிப்போய் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்தினர் சாலையில் உயிருக்கு போராடிய இளைஞர்களை காப்பாற்ற முயன்றனர். 108 ஆம்புலன்ஸை உடனடியாக அழைத்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் இளைஞர்களை பரிசோதனை செய்தபோது அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Also Read: குறுக்கே பாய்ந்த தெரு நாய்கள்.. பைக் விபத்தில் சிறுமி பலி
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூன்று இளைஞர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதற்கிடையில் உயிரிழந்த இளைஞர்கள் குறித்த தகவல் வெளியாகியது.
சோகத்தில் மூழ்கிய நெல்லை டவுண்
அதன்படி அவர்கள் நெல்லை டவுன் வையாபுரி நகரை சேர்ந்த லோகேஷ் மற்றும் முகமது அலி தெருவை சேர்ந்த சாதிக் மற்றும் சந்தோஷ் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் இறந்த லோகேஷ் டவுன் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திலும், சாதிக் ஒரு ஹோட்டலிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சந்தோஷ் வேலை பார்த்து வந்துள்ளார்.
Also Read: ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!
இவர்கள் மூன்று பேரும் நண்பர்களாக இருந்த நிலையில் சந்தோஷ் செப்டம்பர் 6ஆம் தேதி காலையில் தான் ஊருக்கு வந்துள்ளார். நீண்ட நாள் கழித்து விடுமுறைக்கு நண்பன் வந்துள்ள நிலையில் மூன்று பேரும் சந்தித்துள்ளனர். தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட நிலையில் பாளையங்கோட்டையில் பானி பூரி சாப்பிடுவதற்காக சென்றபோது விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.பைக்கை அதிவேகமாக ஓட்டியது தான் விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவே சாலையில் செல்லும்போது முறையாக தலைக்கவசம் அணிவது, பைக்கில் இரு நபர்கள் பயணிப்பது, சாலை விதிகளை மதிப்பது, மிதமான வேகத்தில் பயணிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.