கோவையில் அதிர்ச்சி.. செமஸ்டர் தேர்வில் ஹைடெக் காப்பி.. ஒரே கல்லூரியில் சிக்கிய 70 மாணவர்கள்!
Coimbatore Students Cheating Semester Exams : கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் 70 மாணவர்கள் செல்போன், ஏஐ மூலமாக காப்பி அடித்தபோது பிடிபட்டனர். இதில், பாதி பேர் மாணவிகள் என்று அந்தக் கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார் .
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் செல்போன் மூலம் காப்பி அடித்ததாக 70 மாணவர்கள் பிடிபட்டனர். தற்போதைய சூழலில் மாணவர்கள் அருகில் இருப்பவர்களின் விடைத்தாளை பார்த்தோ, துண்டு சீட்டை பார்த்தோ காப்பி அடிக்கும் முறை மாறி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செல்போன் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலமாக காப்பி அடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் கூறுகையில், தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளை எவ்வளவுதான் கண்காணித்தாலும் சில மாணவர்கள் செல்போனை உடலில் மறைத்து சாமர்த்தியமாக தேர்வு அறைக்குள் கொண்டு சென்று விடுகின்றனர். முன்னதாக, அவர்களை முழுமையாக சோதனை செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், தேர்வு நடக்கும்போது மிகவும் கவனமாக கண்காணிப்பதன் மூலமாக பெரும்பாலான முறைகேடுகளை பேராசிரியர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.
செல்போன், ஏஐ மூலம் தேர்வில் காப்பியடித்த 70 மாணவர்கள்
அதன் அடிப்படையிலேயே, செல்போன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தேர்வில் காப்பி அடித்து எழுத முயன்ற 70 மாணவர்களை கண்டுபிடித்துள்ளோம். இதில், பாதி பேர் மாணவிகள் ஆவர். தற்போது, பிடிபட்ட 70 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் செல்போனுடன் சிக்கி உள்ளனர். குற்றத்தை மறைக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் அடுத்தடுத்த தேர்வுகள் எழுத நாங்கள் அனுமதிக்கவில்லை. காப்பி அடிக்கும் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் சிக்கியுள்ளனர்.
மேலும் படிக்க: மருமகளை வன்கொடுமை செய்த மாமனார்.. கர்ப்பத்தை கலைக்க சென்றதால் வெளிவந்த சம்பவம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி!
சிறிய அளவிலான கருவிகளால் தேர்வில் காப்பி
ஆண்கள், பெண்கள் என்ற வேதம் இல்லை என்பது மட்டுமே ஒரு விதமான ஆறுதலாகும். இந்த கல்லூரி மட்டுமில்லை, அனைத்து கல்லூரிகளிலுமே அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப உதவியுடன் கூடிய தேர்வு முறைகேடுகள் அதிகரித்து வருகிறது. செல்போன் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிலான சிறிய கருவிகளையும், மூக்கு கண்ணாடியையும் பயன்படுத்துகிறார்கள். இதை தடுக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விஜய் ராணியிடம் தெரிவித்த போது, மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பது தற்போது சவாலாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.
பல்கலைக்கழக கமிட்டி கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்
தேர்வுகள் நடைபெறும் போது மாணவிகளை, பெண் கண்காணிப்பாளர்களும், மாணவர்களை ஆண் கண்காணிப்பாளர்களும் சோதனை பின்னரே தேர்வு அறைக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். தேர்வில் முறைகேடு செய்து சிக்கிய மாணவர்களின் விபரங்களை கல்லூரிகள், பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள். அவற்றை, கமிட்டி விசாரித்து சிண்டிகேட் முடிவுகளின் அடிப்படையில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாணவர்கள் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.