AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல், அவதூறு புகார்: திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Case Against DMK MLA: கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தொலைபேசியில் தன்னிடம் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாகவும், தொடர்ந்து பணியில் நீடிப்பது தொடர்பாக மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல், அவதூறு புகார்: திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Nov 2026 07:04 AM IST

நவம்பர் 27, 2026: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அரசு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது, பெண்ணின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு:

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தொலைபேசியில் தன்னிடம் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாகவும், தொடர்ந்து பணியில் நீடிப்பது தொடர்பாக மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாக அநாகரீகமான தகவல்களை அனுப்பியதுடன், தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அரசு அதிகாரியாகத் தனது பணிகளை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சென்னை மேயர் பிரியாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. தவெகவினருக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் தொலைவில் இல்லை.. திமுக மகளிரணி கடும் கண்டனம்!

புகாரின் பின்னணி என்ன?

இந்தப் புகாருக்குப் பின்னணியாக, திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பெண் பணியாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான விவகாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இரவு 8.32 மணியளவில் வசந்தம் கார்த்திகேயன் பெண் அதிகாரியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பிரிவுகளில் வழக்கு?

வசந்தம் கார்த்திகேயன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 79, 132, 351(2) ஆகிய பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் 4-வது பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் தியாகதுருகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்! 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் மீது புகார்!

ஏற்கனவே கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், தற்போது அதே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீதும் பெண் அரசு அதிகாரி புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us