AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதுக்கோட்டையில் ரூ.23.25 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் திறப்பு… 13,676 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் விஜய்!

CM Vijay Pudukottai Visit: புதுக்கோட்டை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். சத்தியமூர்த்தி சாலையில் சுமார் ரூ.23.25 கோடி மதிப்பீட்டில் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் ரூ.23.25 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் திறப்பு… 13,676 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் விஜய்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 02 Nov 2026 17:31 PM IST

நவம்பர் 2, 2026: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று (நவம்பர் 2) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு புதிய பேருந்து நிலையம், நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை பயணம்!

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்குப் புறப்பட்டார். மாவட்ட எல்லையான மாத்தூர் முதல் புதுக்கோட்டை வரை வழிநெடுகிலும் அவருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

பாரம்பரிய விவசாயப் பொருட்கள் கண்காட்சியைப் பார்வையிட்ட முதல்வர்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய விவசாயப் பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய நெல் ரகங்கள், முந்திரி மற்றும் சிறுதானிய வகைகள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களைப் பார்வையிட்டதுடன், அவற்றின் சிறப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். விவசாயிகளுடனும் கலந்துரையாடினார்.

மேலும் படிக்க: தீபாவளி நேர பணப்புழக்கம்.. தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

ரூ.68.31 கோடியில் 44 திட்டப் பணிகள் திறப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அதன்படி, சுமார் ரூ.68.31 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த 44 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.

மேலும், ரூ.11.72 கோடி மதிப்பீட்டில் 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு நவீன உள்விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைத்தார். இங்கு இறகுப்பந்து, கைப்பந்து, மேசைப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.23.25 கோடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு!

புதுக்கோட்டை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். சத்தியமூர்த்தி சாலையில் சுமார் ரூ.23.25 கோடி மதிப்பீட்டில் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 60 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பேருந்து நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வணிக வளாகங்கள், பயணிகள் காத்திருப்பு அறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதிகள் மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

13,676 பயனாளிகளுக்கு ரூ.62.73 கோடி நலத்திட்ட உதவிகள்!


தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் சார்பில் 13,676 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.62.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

இதில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், கல்வி உதவிகள், குடும்ப அட்டைகள், தையல் இயந்திரங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் இடம்பெற்றிருந்தன.

விவசாயிகளுடன் கலந்துரையாடல்!

பாரம்பரிய விவசாயப் பொருட்கள் கண்காட்சியைப் பார்வையிட்டபோது விவசாயிகளின் தேவைகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். குறிப்பாக, பாசனத்திற்குத் தேவையான காவிரி நீர் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆதனக்கோட்டை பகுதியில் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் முந்திரி தொழில் குறித்தும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இப்பகுதியில் சுமார் 5 லட்சம் குடும்பங்களுக்கு முந்திரி தொழில் வாழ்வாதாரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரோடு ஷோவில் உற்சாக வரவேற்பு… செல்ஃபி வீடியோ எடுத்த விஜய்!


அரசு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பிற்பகலில் முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை நகரில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வாகனம் சென்ற வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று கையசைத்து வரவேற்றனர். பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

அப்போது பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, வழக்கமான தனது பாணியில் செல்போனைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், தனது பாணியில் செல்ஃபி வீடியோ ஒன்றையும் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Follow Us