பாலியல் தொழிலில் பள்ளி மாணவி.. சிக்கிய சினிமா பிரபலம்
சென்னையில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 22 அன்று கோயம்பேட்டில் மாணவி மீட்கப்பட்டு, துணை நடிகை உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். ஆதரவற்ற மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலுக்கு தள்ளிய சினிமா இயக்குனர் பாரதி கண்ணனும் சிக்கியுள்ளார்.

சென்னை, அக்டோபர் 7: சென்னையில் சினிமாவுலகை சேர்ந்த நபர் மாணவி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தங்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறை ஒன்றில் கேகே நகரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மீட்கப்பட்டார். அந்த மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகை நாகலட்சுமி, கார்த்திக் குமார், அஞ்சலி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
இந்த நிலையில் மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து தனிமையில் தவித்த மாணவி கேகே நகரில் இருக்கும் தனது தாயின் தோழியான கிளப் டான்ஸர் பூங்கொடி என்பவர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
Also Read: முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!
ஆதரவற்ற நிலையில் இருந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பூங்கொடி அவரை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். ஆரம்பத்தில் இதற்கு மறுத்த மாணவி பின்னர் பணம், உயர் ரக ஆடை, ஐபோன், விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் என கிடைத்ததால் மனம் மாறியுள்ளார். இதற்கு சம்பந்தப்பட்ட மாணவியின் பெரியம்மா மகளான ஐஸ்வர்யா என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
சிக்கிய சினிமா பிரபலம்
இந்த நிலையில் மாணவியை பூங்கொடி பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். மேலும் வசதி படைத்த வாடிக்கையாளர்களை சினிமா பட இயக்குநரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன் ஏற்பாடு செய்து கொடுத்தது தெரியவந்தது. அவரிடம் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது இந்த உண்மை வெளியே வந்துள்ளது.
இதனை அடுத்து பூங்கொடி, ஐஸ்வர்யா மற்றும் பாரதி கண்ணன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கட்டுமான நிறுவன ஊழியரான மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகி ரமேஷ் ஆகியோரும் கைதாகினார். இதில் பாரதி கண்ணன், மகேந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மாணவி வழக்கம் போல பள்ளிக்கும் சென்று வந்த நிலையில் தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கடந்த மாதம் தங்கும் விடுதியில் நடைபெற்ற சோதனையின் போது மாணவி சிக்கியதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் பாரதி கண்ணன் மூலம் மாணவியுடன் பாலியல் உறவில் இருந்தது யார் என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது