மதுரையில் துணை குடியரசுத் தலைவரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. நலம் விசாரிப்பு!!
thevar jayanthi 2025: தேவர் ஜெயந்தியையொட்டி, பசும்பொன்னிற்கு இன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் செல்ல உள்ளனர். அந்தவகையில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் செல்ல உள்ளதாக தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் செல்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் - துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
மதுரை, அக்டோபர் 30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று காலை மரியாதை செலுத்த உள்ளனர். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு மரியாதை செலுத்த இருக்கும் நிலையில், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். சுமார் 10,000 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. அதோடு, அம்மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Also read: நவ. 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்.. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..
இதனையொட்டி நேற்றிரவு (அக்.29) முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார். அங்கு 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது, இருவரும் கை குலுக்கிக் கொண்டு ஒருவரையொருவர் நலம் விசாரித்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. அந்த விடுதியில் தான் துணை குடியரசுத் தலைவரும் தங்கியிருந்தார் எனத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ள விடுதிக்கு சென்றடைய இரவு 10.30 மணி ஆனதாக தெரிகிறது. எனினும், அவ்வளவு தாமதமானாலும் உடனடியாக சென்று சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, தங்கம் தென்னரசு, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அரசியலிலும், ஆன்மீகத்திலும் பெருமைக்குரியவராகத் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர்30ஆம் தேதியாகும். எனவே, ஆண்டுதோறும் தேவர் திருமகனாரின் ஜெயந்தியும். குருபூஜையும் பசும்பொன்னில் ஒரே நாளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், பசும்பொன்னில் இன்று காலை 9.30 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
Also read: SIR – தமிழகத்தில் நவ. 2 நடக்கும் அனைத்து கட்சி கூட்டம்.. த.வெ.கவிற்கு அழைப்பு..
முன்னதாக, 2007-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. அந்தசமயம், ராமநாதபுரம் பசும்பொன்னில் அவர் வாழ்ந்த இல்லம் புனரமைக்கப்பட்டு நூற்றாண்டு தோரண வாயில் அமைக்கப்பட்டு, புகைப்படக் கண்காட்சிக் கூடம், அணையா விளக்கு, புதிய நூலகக் கட்டடம், முளைப்பாரி மண்டபம், முடி காணிக்கை மண்டபம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.
அந்தவகையில், தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த குருபூஜை நிகழ்வானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நிச்சயமாக இன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன்னிற்கு நேரில் சென்று தேவருக்கு மரியாதை செலுத்துவர். இதனால், அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.