Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நவ. 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்.. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..

TVK Vijay Statement: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக வரக்கூடிய நவம்பர் 5 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்.. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 29 Oct 2025 17:12 PM IST

சென்னை, அக்டோபர் 29, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக, வரவிருக்கும் நவம்பர் 5, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டலில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் அதன் முதல் வேட்பாளர்களை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

ஒரு மாதத்திற்கு பின் அரசியல் நடவடிக்கை:

இந்த சூழலில், செப்டம்பர் 27 அன்று தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அந்த பிரச்சாரம் முடிந்த பின், அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிகழ்விற்கு பின் சுமார் ஒரு மாத காலம் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து அரசியல் நகர்வுகளும் முடங்கியிருந்தன. எந்த நிகழ்ச்சிகளும் அல்லது அரசியல் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அக்டோபர் 27, 2025 அன்று, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல கட்சியின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அக்டோபர் 29, 2025 இன்று, தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதே சமயம், அக்டோபர் 28, 2025 அன்று புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

ஒரு மாதத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில், நவம்பர் 5, 2025 அன்று கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5ஆம் தேதி பொதுக்குழு கூட்டம்:


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ சூழ்ச்சியாளர்களும் சூதுமதியாளர்களும் துச்சமாக எண்ணி நம்மைத் தூற்றிய போதிலும், அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை — அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.

கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, வருகிற 05.11.2025 (புதன்கிழமை) அன்று நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.