SIR – தமிழகத்தில் நவ. 2 நடக்கும் அனைத்து கட்சி கூட்டம்.. த.வெ.கவிற்கு அழைப்பு..
SIR All Party Meeting: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி குறித்து திமுக அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2, 2025 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 29, 2025: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி தொடர்பாக தமிழகத்தில் வரவிருக்கும் நவம்பர் 2, 2025 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தொடங்க உள்ளதாக அண்மையில் அறிவித்தது.
SIR – திமுக ஆலோசனை கூட்டம்:
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. இதற்கு முன்னதாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 27, 2025 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வெளிப்படைத்தன்மை இன்றியும் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப் பணி நடத்துவது, வாக்காளர்களின் உரிமையை பறித்து, குறிப்பிட்ட கட்சிக்கு உதவ தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சதி” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்துக் கட்சிகளுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை
அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட்நாயக் இன்று (அக்டோபர் 29, 2025) அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் எப்போது SIR தொடங்கும்?
தமிழகத்தில் வரவிருக்கும் நவம்பர் 4, 2025 அன்று சிறப்பு தீவிரத் திருத்தப் பணி தொடங்கவுள்ளதாகவும், இதற்காக 70 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நவம்பர் 3ஆம் தேதிக்குள் பயிற்சி அளிக்கப்படும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் 2025 டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: நவ. 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்.. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..
இருப்பினும், இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை எதிர்த்து பல்வேறு கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு அதிமுக தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள தவெகவிற்கு அழைப்பு:
இந்த சூழலில், தமிழக திமுக அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2, 2025 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அக்டோபர் 29, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.