இந்தியா முழுவதும் 260 வந்தே பாரத் ரயில்கள்… படுக்கை வசதியுடன் தயாராகிறது… சென்னை ஐசிஎஃப் வைத்த இலக்கு!
Vande Bharat Trains: இந்தியா முழுவதும் படுக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் 260 வந்தே பாரத் ரயில்கள் தயார் செய்வதற்கு இலக்கு வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரம்பூர் ஐசிஎஃப்-இல் 260 படுக்கை வசதியுடைய வந்தே பாரத் ரயில்கள் தாயாரிக்க இலக்கு
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தும் வகையிலும், பயணிகளுக்கு விரைவான ரயில் சேவையை வழங்கும் வகையிலும், வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்கள் கட்டமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019- ஆம் ஆண்டு டெல்லி மற்றும் வாரணாசி இடையே பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெருகியது. ஏனென்றால், குறைந்த நேரத்தில், சொகுசான பயணத்தில் பல்வேறு வசதிகளுடன் ரயில் சேவை இருப்பதால் இதற்கு ஏராளமான பயணிகள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் சுமார் 150- க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் ரயில்கள் இயக்கம் கிடையாது.
படுக்கை வசதியுடைய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி
இதன் காரணமாக, இந்த வகையான வந்தே பாரத் ரயில்கள் முழுவதும் இருக்கை வசதி மட்டுமே உள்ளது. படுக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில்கள் கிடையாது. இது ஒரு மிகப்பெரிய குறையாக பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய இரவு நேரங்களில் இயக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ சி எஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இங்கு தயாரிக்கப்பட்ட முதல் படுக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில் ஹவுரா மற்றும் கவுகாத்தி இடையே கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: தமிழகத்தில் 66 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு… ஏப்ரல் 1 முதல் அமல்… எவ்வளவு தெரியுமா?
வந்தே பாரத் ரயில்களுக்கு மிகுந்த வரவேற்பு
அதிவேகமாக செல்லக்கூடிய ரயில் என்பதாலும், படுக்கை வசதி இருப்பதாலும் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல, இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் படுக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 3 ஆண்டுகளில் சுமார் 200- க்கும் மேற்பட்ட படுக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
260 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இலக்கு
இதற்காக, சென்னை பெரம்பூர் ஐ. சி. எஃப் ரயில் பெட்டிகள் தயார் செய்யும் ஆலைக்கு அடுத்தடுத்து ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. இதில், வரும் 3 ஆண்டுகளில் சுமார் 260 வந்தே பாரத் ரயில்களை தயார் செய்வதற்கு ஐ .சி. எஃப். ஆலை நிர்வாகம் இலக்கு வைத்து பணிகளை மேற்கொண்டு வருவதாக ரயில்வே நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு தயார் செய்யப்படும் படுக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில்கள் ஒவ்வொன்றாக மாநிலம் வாரியாக இயக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை மாற்றம்; கோவை எக்ஸ்பிரஸுக்கு புதிய நிறுத்தம்