கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்த காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிகப்படியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஜூலை 11, 2025: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரமானது வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் சேதமங்கலம், ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஜூலை 11 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையானது வரும் ஜூலை 17 2025 வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 15 2025 முதல் ஜூலை 17 2025 வரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை:
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் வெப்பநிலை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மதுரை நாகை சென்னை திருச்சி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாகையில் 38.5 டிகிரி செல்சியசும், வேலூரில் 38.5 டிகிரி செல்சியசும், திருச்சியில் 38.3 டிகிரி செல்சியசும், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு:
சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.3 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.
Also Read: வீடுதேடி ரேஷன் பொருட்கள்… எப்போது முதல் தொடக்கம்..? வெளியான அறிவிப்பு
இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்த காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிகப்படியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி இருக்கும்?
இருப்பினும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது