தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Sanitation Workers Case | சென்னை மாநகராட்சியில் உள்ள இரண்டு மண்டலங்களின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது இன்று (ஆகஸ்ட் 12, 2025) விசாரணைக்கு வருகிறது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 12 : தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 12, 2025) விசாரணைக்கு வர உள்ளது. ரிப்பன் மாளிகை அருகே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தூய்மை பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க வழிவகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று (ஆகஸ்ட் 11, 2025) இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வழக்கின் விசாரணையை இன்று (ஆகஸ்ட் 12, 2025) எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், இன்று விசாரணைக்கு வருகிறது.
10 நாட்களுக்கும் மேலாக போராடும் தூய்மை பணியாளர்கள்
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களின் ரூ.276 கோடி மதிப்பிலான தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரிப்பன் மாளிகை அருகே போராடி வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க வழிவகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு
மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை
அந்த மனுவில், இந்த ஒப்பந்தத்தின் காரணமாக தூய்மை பணியாளர்களின் வாழவாதாரம் பாதிக்கப்படும் என்றும், தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி தூய்மை பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 11, 2025) நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் பிஎஸ் ராமன் இந்த வழக்கில் பதில் மனு தயாராக உள்ளதாகவும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தார். எனவே வழக்கை ஆகஸ்ட் 12, 2025 ஆம் தேதிக்குள் விசாரிப்பதாகவும் அதற்குள்ளாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Seeman: தூய்மைப் பணியாளர்கள் 10 நாள் போராட்டம்.. தனியார்மயமாக்கல் அவசியம் ஏன்..? சீமான் கேள்வி!
போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்க கோரிக்கை
இதற்கிடையே நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் வினோத், தூய்மை பணியாளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். வழக்கறிஞரின் வேண்டுகோளின் அடிப்படையில் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்கிய நீதிபதிகள் அதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.