‘மீண்டும் வெள்ளத்தில் மிதந்த சென்னை’.. சரமாரி கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!!
சென்னையின் இந்த நிலைமைக்கு இயற்கை பேரழிவு முக்கிய காரணமல்ல, மாறாக நிர்வாக தோல்வியே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாநராட்சி தரப்பில் தற்போது அவசர அவசரமாக சாலைகளை பழுது பார்ப்பதாகவும், இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
சென்னை, நவம்பர் 10: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை நகரின் பல பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. “மழையை எதிர்கொள்ள சென்னை முழுமையாக தயாராக உள்ளது” என அரசு முன்கூட்டியே கூறி வந்தாலும், மழை பொழிவின் முதல் சில மணி நேரத்திலேயே நகரின் பல முக்கிய சாலைகளும், சந்திப்புகளும், குடியிருப்பு பகுதிகளும் நீரில் மூழ்கியதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முன்னதாக, 97% மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாக அரசு தரப்பில் சென்னை மேயர் முதல் அமைச்சர்கள் வரை பெருமிதம் தெரிவித்து வந்தனர். ஆனால், பருவமழை தொடங்கியதுமே முக்கிய சாலைகள் பெரிதும் சேதமடைந்து காணப்படுகிறன்றன. குறிப்பாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இதனால், பல சிக்கல்களை எதிர்கொண்டனர்.
முக்கிய சாலைகளை சூழ்ந்த வெள்ளம்:
அந்தவகையில், நகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, OMR, தாம்பரம்–பல்லாவரம், ஆற்காடு சாலை, முழுவதும் தண்ணீர் நிரம்பி, பெரும் பள்ளங்கள் உருவாகியிருந்தன. இந்த சாலைகளில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தான நிலையை எதிர்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மழைக்கும் முன் திடீரென சாலைகளை தோண்டுவது, கடைசி நேரத்தில் சீரமைப்பு பணிகள் செய்வது போன்ற சூழ்நிலைகள் உரிய காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படாததைக் காட்டுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு




மழைநீர் வடியாமலிருந்ததால் பல இடங்களில் நீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு, 2-3 மணி நேரம் வரை செலவிட்டதாகவும், பள்ளங்கள் நிறைந்துள்ள சாலைகள் காரணமாக வாகனங்கள் சேதமடைந்ததாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். கோடம்பாக்கம், வடபழனி மற்றும் தி.நகர் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்தபோதிலும், பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
குடியிருப்பு பகுதிகளை விட்டு வைக்காத வெள்ளம்:
சாலைகள் மட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதிகளிலும் இதே நிலை தான் என்கின்றனர். வீடுகளில் தண்ணீர் புகுதல், மின் தடை, சுத்தம் செய்வதில் சிரமம், குடிநீர் பாதிப்பு போன்றவை பொதுவாகக் காணப்பட்டன. கடந்த மாதம் வடசென்னையில் தண்ணீர் தேங்கிய குழியில் விழுந்து இரண்டு வயது குழந்தை இறந்தது. மெரினா கடற்கரை கரையோரத்தில் காணப்படும் நச்சு ரசாயன நுரை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் மழைநீரில் கலப்பதால் அவை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகளை செய்ததாக கூறினாலும், அதன் தரம் மற்றும் பயனில் கேள்விகள் எழுந்துள்ளன. “இவ்வளவு செலவு செய்திருந்தால் ஏன் இன்னும் வெள்ளம் நிற்கிறது?, ஸ்மார்ட் சிட்டி சாலைகள் ஏன் இத்தனை விரைவாக பள்ளமாகிறது? என்ற கேள்விகளையே எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் முன்வைக்கிறார்கள். நகர வடிவமைப்பு, வேலையின் தரம், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் கவனமின்மை உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்கட்சிகள் சரமாரி கேள்வி:
அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நகரத்தின் குடிமை உள்கட்டமைப்பை மோசமாக கையாள்வதாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் வினோஜ் செல்வம், “நமக்கு சிங்கப்பூர் போன்ற நகரம் தேவையில்லை. அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பான சாலைகள் மட்டுமே தேவை” என்றார்.
சென்னை போன்ற பெருநகரங்களில் வெள்ள நீர் தேங்குவதை நிரந்தரமாகத் தீர்க்க, காலத்திற்கேற்ப மழைநீர் வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவது அவசியம். தரமான கட்டுமானம், உறுதியான சாலைகள், உயர்ந்த வடிநீர் குழாய்கள் மற்றும் சரியான நகர திட்டமிடல் முக்கியம் என்கின்றர்.
மேலும் படிக்க: ‘SIR பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை’.. அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!!
மழைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் திடீரென வருவது அல்ல, அவை எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும், நகரம் செயல்படுவதற்கும், நிர்வாகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு துல்லியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.