தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கணிப்பு!!
தித்வா புயலைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களுக்கு மழை இருக்கும் எனவும், டிசம்பர் 08 முதல் டிசம்பர் 12ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கோப்புப்படம்
சென்னை, டிசம்பர் 07: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாவும், தொடர்ந்து டிச.12ம் தேதி வரை மாநிலத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தித்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், தென் மாட்டவங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக கடுமையான மழையை பெற்றன. தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையும் சற்று தீவிரமடைந்த மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழைப்பொழிவை வழங்கியது. அவ்வாறு, நவம்பர் மாதத்திற்கு தேவையான மழை அளவு கிடைத்தது. தொடர்ந்து, இந்த மாதத்திலும், மாத இறுதியில் மழை சற்று தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஜய்யின் பொதுக்கூட்டம் எப்போ தெரியுமா? அனுமதி கேட்டு தவெக சார்பில் விண்ணப்பம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி:
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 06) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
நாளை மழை வாய்ப்பு எப்படி?
தொடர்ந்து, நாளை (டிசம்பர் 07) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, டிசம்பர் 08 முதல் டிசம்பர் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது..
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
8-12-2025 முதல் 10-12-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்த சமயத்தில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.