நகைக்காக நடந்தக் கொடூரக் கொலை.. உதவி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய தாய் – மகள் கைது!!
Brutal murder committed for jewelry: இதனைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மாதிரிப் புகைப்படம்
விருதுநகர், மார்ச் 12: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, மூதாட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது நகைகளைப் பறித்த தாய் மற்றும் அவரது 17 வயது மகளை போலீசார் கைது செய்துள்ளனர். தனியாக நடந்துச் சென்ற மூதாட்டிக்கு லிஃப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் தாயும், மகளும் அழைத்துச்சென்று இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். தொடர்ந்து, மூதாட்டியை காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் வசமாக சிக்கியுள்ளனர். திடுக்கிட வைக்கும் இந்த சம்பவத்தில் தாயும், மகளும் எவ்வாறு சிக்கினர் என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: காட்டுக்குள் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. 6 தனிப்படைகள் அமைப்பு!
திருமணத்திற்குச் சென்றவர் மாயம்:
திருச்சுழி அடுத்த பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அய்யம்மா (62). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரியாபட்டி அருகே உள்ள தோப்பூர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார். விழா முடிந்த பிறகு அய்யம்மா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காட்டுப்பகுதியில் கிடந்த உடல்:
இதையடுத்து, போலீசார் காணாமல் போன மூதாட்டியை தேடி வந்த நிலையில், திருச்சுழி – காரியாபட்டி சாலையில் உள்ள புல்லநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒரு காட்டுப்பகுதியில் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றிய போலீசார், அது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த உடல் காணாமல் போன அய்யம்மா தான் என்பதை உறவினர்கள் மூலம் உறுதி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
துப்பு துலக்கிய சிசிடிவி காட்சிகள்:
இந்தக் கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிய திருச்சுழி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு மொபட்டில் இரண்டு பெண்களுக்கு நடுவில் அய்யம்மா அமர்ந்து சென்ற காட்சிப் பதிவாகி இருந்தது. அந்த வாகனத்தை ஒரு சிறுமி ஓட்டிச் சென்றதும் போலீசாருக்குத் தெரியவந்தது.
தாய், மகள் சிக்கியது எப்படி?
விசாரணையில், காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த 39 வயதுப் பெண்ணும், அவரது 17 வயது மகளுமே இந்தக் கொலையைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருமண விழா முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்த அய்யம்மாவிடம், தாங்கள் அதே பகுதிக்குச் செல்வதாகவும், அவரை வீட்டில் கொண்டு போய் விடுவதாகவும் கூறி ஆசை வார்த்தை காட்டி மொபட்டில் ஏற்றியுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், அய்யம்மாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: இலங்கை கடற்படையினர் தொடர் அத்துமீறல்… ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது… படகு-மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல்!
தாயும், மகளும் அதிரடியாக கைது:
தற்போது அந்தப் பெண்ணையும், அவரது மகளையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனிதாபிமானமற்ற முறையில் உதவி செய்வது போல் நடித்து, நகைக்காக முதியவரைக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.