பழைய பொருட்களை எரித்து, மேளம் கொட்டி உற்சாகம்.. களைகட்டிய போகி கொண்டாட்டம்!!
Bhogi festival 2026: இதன் காரணமாக சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாகவே சென்றன. அந்தவகையில், சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகள் அனைத்திலும் புகை மூட்டம் நிறைந்து காணப்பட்டது.
சென்னை, ஜனவரி 14: போகிப் பண்டிகை தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜனவரி 14) போகிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13ஆம் தேதி போகிப்பண்டிகை தினம் வரும் நிலையில், இந்த முறை ஒரு நாள் தாமதமாக வந்துள்ளது.
இதையும் படிக்க : திமுக-காவல்துறை தொடர்பாக சிபிஐ-யிடம் ஆதாரத்துடன் புகார்…பரபரப்பை கிளப்பிய சி.டி.ஆர். நிர்மல் குமார்!
தைத்திருநாளை உற்சாகமாக வரவேற்ற மக்கள்:
தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.




அதிகாலை முதலே பழைய பொருட்கள் எரிப்பு:
இதையொட்டி, காலை 5 மணி முதலே பல பகுதிகளில் மக்கள் பழைய பொருட்களை எரிக்க தொடங்கியதால் பெரும்பாலான சாலைகள் புகைமூட்டமாக காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நிலவி வரும் பனிப்பொழிவுடன், புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் முன்னால் யார் செல்கிறார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் சாலைகளில் சென்றவர்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
சென்னை முழுவதும் புகை மூட்டம்:
இதன் காரணமாக சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாகவே சென்றன. அந்தவகையில், சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகள் அனைத்திலும் புகை மூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில், புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் புகைமூட்டம் அதிகமாக இருந்தது.
அதிகரித்த காற்று மாசு:
குறிப்பாக, மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும் புகைமூட்டம் நிரம்பி காணப்பட்டது.இதனால் மின்சார ரெயில் ஓட்டுனர்கள் ஒலி எழுப்பியபடியே ரெயிலை இயக்கிச் சென்றனர். அதோடு, புகை மூட்டம் அதிகரித்து காணப்படுவதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: சாலையில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!
பிளாஸ்டிக், டயர், டியூப் எரிக்கக்கூடாது:
முன்னதாக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.