மாநிலங்களவை சீட் கேட்கும் காங்கிரஸ்.. கனிமொழியுடன் ஒன்றரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை..
மாநிலங்களவை எம்.பி பதவி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு குறித்து ஆலோசித்தோம். சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் பேசி தொகுதிகளை இறுதிசெய்வோம். பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அழைக்கும் தேதிக்காக காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
சென்னை, பிப்ரவரி 24: திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பியை தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர் நேற்று சந்தித்து சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு, நாடாளுமன்ற மேலவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வழங்கி வருகிறார். அந்தவகையில், அவர் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பியை சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்.. மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி?
ஒன்றரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை:
அப்போது, செல்வப்பெருந்தகையுடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கரும் உடன் சென்றிருந்தார். இந்த அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்வை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையாகவும் அமைத்துக்கொண்டனர். கனிமொழியிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் கிரிஷ் சோடாங்கரும் செல்வப்பெருந்தகையும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு:
இந்த பேச்சுவார்த்தையின்போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கிரிஷ் சோடாங்கர் கேட்டுள்ளார். அதற்கு கனிமொழி, ‘கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு சரிபட்டு வராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதுதான் திமுகவின் நிலைப்பாடு. தொகுதி எண்ணிக்கை குறித்து டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீடு குழுவை சந்தித்து பேசி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியதாக தெரிகிறது.
மேலும் படிக்க: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் – எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம்..
மாநிலங்களவை சீட் கேட்ட காங்கிரஸ்:
இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்தவுடன், கிரிஷ் சோடாங்கர் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். மாநிலங்களவை எம்.பி பதவி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு குறித்து ஆலோசித்தோம். சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் பேசி தொகுதிகளை இறுதிசெய்வோம். பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அழைக்கும் தேதிக்காக காத்திருக்கிறோம்” என்றார். ஆட்சியில் பங்கு குறித்து கனிமொழியிடம் பேசினீர்களா? என்று கேட்டதற்கு, ‘எல்லாம் இருக்கிறது. ஆனால் தற்போது முதலில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது பற்றி பேசினோம்’ என்றார்.