சிபிஐ விசாரணைக்கு ஆஜரான விஜய்.. கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பிய அதிகாரிகள்.. நாளையும் தொடருமா?
Vijay CBI Enquiry: நேற்று மாலை விஜய் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம், அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் கடுமையான கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது ஏன் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டது.
டெல்லி, ஜனவரி 19, 2026: டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆஜரான நிலையில், அவரிடம் அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதாவது, தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன, கூட்ட நெரிசல் ஏற்பட்டபோதிலும் தொடர்ந்து பேசக் காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு அதிகளவில் மக்கள் திரண்டிருந்தனர். பிற்பகல் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் மாலை 7.00 மணிக்கு தான் வருகை தந்து பொதுமக்களை சந்தித்து பேசத் தொடங்கினார். அவர் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கரூர் கூட்ட நெரிசல் – 42 பேர் உயிரிழப்பு:
அவர் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை கால அவகாசம் நீடிப்பு.. தேர்தல் ஆணையம்..
இதன் பின்னர், சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
சிபிஐ விசாரணை:
அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன் பேரில், கடந்த ஜனவரி 12ஆம் தேதி விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை இரண்டாவது நாளாக நீடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொங்கல் விடுமுறையை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி 19ஆம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜய்யிடம் கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பிய அதிகாரிகள்:
இந்த நிலையில், நேற்று மாலை விஜய் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம், அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் கடுமையான கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது ஏன், எப்போது பேச்சை முடித்தீர்கள், எப்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றீர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூட்டம் அதிகமாக வந்தது எப்படி, கூட்டம் அதிகரிப்பதை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா, தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோதும் கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா, கண் எதிரே ஏற்பட்ட கூட்ட நெரிசலை பார்க்கவில்லையா, இவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியதற்கான காரணம் என்ன உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த விஜய், தமிழக காவல்துறையின் வழிநடத்தலின் படியே தான் செயல்பட்டதாக குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளித்ததாகவும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், இந்த விசாரணை நாளையும் தொடரும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.