ஆம்ஸ்ட்ராங் கொலை – ஏ1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்
Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த மரணம் வழக்கு விசாரணையில் பெரும் திருப்புமுனையாக கருதப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகேந்திரன் - ஆம்ஸ்ட்ராங்
சென்னை, அக்டோபர் 9: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் மரணமடைந்திருப்பது இந்த வழக்கில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே கும்பல் ஒன்றின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்படும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கட்சிகளை சார்ந்த 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஓராண்டுக்கும் மேலாக தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் போதிய முன்னேற்றம் இல்லாததால் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்.. புதிய கட்சியை தொடங்கிய மனைவி பொற்கொடி..
இதனையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தியில் அவருக்கு கல்லீரல் பாதிப்பு பல ஆண்டுகளாக இருந்து வந்தது தெரிய வந்தது. சிறையில் இருக்கும் போது இது தீவிரமடைந்ததால் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரச சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனளிக்காமல் இன்று (அக்டோபர் 9) நாகேந்திரன் காலையில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டதால் அவர்களை தேடும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் தொடர்புடைய மத்தொரு மற்றொரு ரவுடியான திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். கொலை வழக்கிற்கு ரவுடி சம்போ செந்தில் உடன் சேர்ந்து நாகேந்திரன் சதித்திட்டம் தீட்டியது போலீசரும் விசாரணையில் வெளிப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
முன்னதாக கடந்த ஆண்டு அவரை கைது செய்தபோது போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் அனுமதி கேட்டபோது நாகேந்திரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது போல் நானும் கொலை செய்யப்படுவேன் என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது நீதிபதியிடம் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாரம் இரண்டு முறை டயாலிசிஸ் செய்து வருவதாகவும் என்னை காவல்துறை விசாரணைக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.