Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் – தவெக நிர்வாகி ராஜ்மோகன் வேதனை

Karur Stampede : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன் முதன்முறையாக இந்த சம்பவம் தொடர்பாக மனம் திறந்துள்ளார். அவரது பதிவில், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும்  – தவெக நிர்வாகி ராஜ்மோகன் வேதனை
விஜய் - ராஜ்மோகன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Oct 2025 15:38 PM IST

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். மேலும் தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதன்முறையாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கல்லடிகளை நான் தாங்க வேண்டும்

இந்த நிலையில் தவெகவின் செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி. இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம்.
அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ராஜ்மோகனின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : முன்ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆனந்த், நிர்மல் குமார்!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நலையில் அவர்களின் ஜாமினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் இருவரும் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு அக்டோபர் 10, 2025 அன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. மேலும் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அன்றைய தினம் விசாரணைக்கு வரவிருக்கிறது. உச்சநீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குமா என தமிழக வெற்றிக் கழகத்தினரிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.