முதல்வர் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும் – அண்ணாமலை விமர்சனம்
EPS Meeting Clarification: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு காரில் திரும்பினார். இந்த நிலையில் அவர் திரும்பி வரும்போது முகத்தை மறைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

சென்னை, செப்டம்பர் 18: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) செப்டம்பர் 16, 2025 அன்று டெல்லிக்கு திடீரென பயணம் மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (Amit Shah) சந்தித்து விட்டு வந்த அவர், காரில் செல்லும்போது முகத்தை மறைத்தபடி சென்றதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது வெளிப்படையானது எனவும், சந்திப்புக்குப் பிறகு முகத்தை துடைத்தேனே தவிர மறைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
இன்றைய அரசியல் சூழ்நிலையில், நான் ரெஸ்ட் ரூம் போனாலும் உங்களிடம் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. முகத்தை துடைத்ததை அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. அதே சமயம், அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து அமித் ஷாவிடம் பேசவில்லை என்றும், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்தச் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க : ‘முகத்தை மறைக்கவில்லை..கர்ச்சீப்பால் துடைத்தேன்’ எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி




மேலும் பேசிய அவர், ஆளுங்கட்சியாக வந்த பிறகு திமுக எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாக இருக்கின்றன. எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக விமர்சித்த தலைவர்களையே இன்று ரத்தினக் கம்பளத்தில் வரவேற்கின்றனர். பிரதமரை அழைத்து கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்ற விழாக்களை நடத்தினர். அதே சமயம், எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கருப்பு பலூன் விடுத்தவர்கள், இன்று ஆட்சியில் வந்தவுடன் வெள்ளைக்குடை பிடிக்கின்றனர். இதுவே திமுகவின் இரட்டை முகத் தன்மை என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
திமுக முப்பெரும் விழா குறித்து அண்ணாமலை விமர்சனம்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, 8 ஆண்டுகளுக்கு முன் எந்த மாவட்டத்தில் இருவருக்கு திருடர் பட்டமும், ஊழல் பட்டமும் முதல்வர் கொடுத்தாரோ, இன்று அதே மாவட்டத்தில் அவர்களை வைத்தே விழா நடத்தியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மண் குதிரை மீது அமர்ந்து காவிரிக்கு செல்கிறார். முதலில் கண்ணாடியில் தன்னை முதல்வர் பார்க்க வேண்டும். என்று பேசியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது எல்லோருக்குமே தெரியும், எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் முகத்தை மறைத்ததாக நான் பார்க்கவில்லை, வீடியோவில் அப்படி தெரிந்திருக்கிறது என்றார்.
இதையும் படிக்க : ’தமிழகத்தில் பாஜகவுக்கு No Entry தான்’ திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மேலும் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்வார்கள்
என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய தினகரனை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். ஒரு கூட்டணியில் எவ்வளவு தலைவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சந்தோஷம் என்று பேசினார்.