முதல் தவறு இவங்க மீது தான், ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? – அண்ணாமலை கேள்வி
Karur TVK Stampede: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
தமிழக வெற்றிக் கழகதத்தின் (Tamilaga Vettri Kazhagam) சார்பாக கரூரில் செப்டம்பர் 27, 2025 அன்று விஜய் மேற்கொண்ட பரப்புரையில் 39 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த கவின் என்ற இளைஞரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கரூருக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவத்தில் 40 அப்பாவி மக்களை பறிகொடுத்துள்ளோம். இன்னும் கவலைக்கிடமாய் சிலர் உள்ளனர். எங்கு பார்த்தாலும் அழு குரல் மட்டுமே கேட்கிறது. தமிழகத்தில் இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. இனியும் நடக்கக்கூடாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் இதனை கருத்தில் கொண்டு கரூர் பாஜக சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் கொடுக்கப்படும். மேலும் மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உதவ தீர்மானித்துள்ளோம் என்றார்.
இதையும் படிக்க : கரூர் கொடூரம்.. சுயாதீன விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் நாடும் த.வெ.க..
கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் தவறு
மேலும் பேசிய அவர் தமிழ்நாட்டில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சரியான இடம் அளிக்கப்படுவது இல்லை. மேலும் காவல்துறையினரும் சரியான அளவில் பாதுகாப்பு கொடுக்கப்படுவதும் இல்லை. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் மெரினாவில் விமான சாகச மரணங்கள் தொடங்கி தற்போது கரூர் தவெக கூட்ட நெரிசல் வரை பல இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவறு நடந்துகொண்டே உள்ளது.
எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான் அவர்கள் உரிய இடத்தை கொடுக்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வாய்ப்பே இல்லை என தெரிந்தும் ஏன் அனுமதி கொடுக்கிறார்கள். சரியான இடத்தை கொடுப்பது அரசின் கடமை. முடியவில்லை என்றால், கூட்டத்திற்கு அனுமதியே கொடுக்காதீர்கள்.
இதையும் படிக்க : கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்ததாக பொறுப்பு டிஜிபி சொல்கிறார். பாதுகாவலர்கள், வண்டிக்குள் இருந்தவர்கள் கணக்கில்லை. ஆனால் களத்தில் 100 பேர் கூட இல்லை. போக்குவரத்து காவலர்களோ, சட்டம் ஒழுங்கு காவலர்களோ போதுமான அளவு களத்தில் இல்லை. கூட்டம் வருமென தெரியும். அதற்கேற்ப களத்தில் எத்தனை பேர் இருந்தனர் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.