Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு!

Anna University Harassment Case Verdict : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கு ரூ.90,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு!
ஞானசேகரன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Jun 2025 12:58 PM

சென்னை,  ஜூன் 02 : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு  30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளி ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அவருக்கு 10 பிரிவுகளின் கீழ் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பி.என்.எஸ் சட்டப்பிரிவு 329-யின்படி விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டுகளும், சட்டப்பிரிவு 126(2) -ன்படி, சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் குற்றத்திற்கு 1 மாதமும், சட்டப்பிரிவு 87-ன்படி, வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டுகளும், சட்டப்பிரிவு 127 (2) பிரிவின்படி, உடலில் காயத்தை ஏற்படுத்துதல் குற்றத்திற்கு ஒரு ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், சட்டப்பிரிவு 75(2) -ன்படி, விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் குற்றத்திற்காக 3 ஆண்டுகளும், சட்டப்பிரிவு 76-ன்படி, கடுமையாக தாக்குதல் குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், சட்டப்பிரிவு 64(I)-ன்படி, பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையும், 351(3) சட்டப்பிரிவு கொலை மிரட்டல் விடுத்தல் குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சட்டப்பிரிவு 238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல் குற்றத்திற்கு 3 ஆண்டுகளும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 66(E)-ன்படி, 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை


இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.  தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக  மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஐந்து மாதங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  2024 டிசம்பர் மாதம் 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதாவது, பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தை உலுக்கியது.

வழக்கின் பின்னணி

அரசியல் ரீதியாகவும் விஸ்வரூபம்  எடுத்தது.  பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரி அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.  இதற்கிடையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

அப்போது,  இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க 3  பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்தது. இந்த விசாரணை குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, 2025 பிப்ரவரி மாதம்  100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதில், இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டப்பட்டது. பின்னர், இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு 2025 மார்ச் 7ஆம் தேதி மாற்றப்பட்டது. இதற்கிடையில், தனக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளை தவறானது என்றும் ஆதாரங்கள் இல்லை எனவும் கூறி ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அன்றே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து, 2025 ஏப்ரல் மாதம் முதல் சாட்சிகளிடம் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றம் தொடங்கியது. சுமார் 29 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தினர். மேலும், 75 சான்று ஆவணங்களையும் போலீசார் சமர்பித்தன. 2025 ஏப்ரல் 20ஆம் தேதி அனைத்து சாட்சி விசாரணையும் முடிந்த நிலையில், இருதரப்பு வாதங்கள் நடந்தது.

இருதரப்பு வாதங்களுக்கு நிறைவடைந்ததை அடுத்து, 2025 மே 28ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு, ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் 2025 ஜூன் 2ஆம் தேதியான இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது. அதன்படியே, சென்னை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.