தேர்தலில் எதிரி-துரோகிக்கு அப்பால் தமிழக மக்களின் நலனே முக்கியம்…டிடிவி தினகரன்!
AMMK General Secretary TTV Dhinakaran : சட்ட மன்ற தேர்தலில் எதிரி மற்றும் துரோகிக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களின் நலனே முக்கியம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தெரிவித்தார் .

தேர்தலில் எதிரி-துரோகிக்கு அப்பால் மக்கள் நலனே முக்கியம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் தஞ்சாவூரில் இன்று திங்கள்கிழமை ( ஜனவரி 5) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அ. ம. மு. க பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தலைமை வகித்தார். இதில், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரனுக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, டி. டி. வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் எதிரி, துரோகி, நண்பன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு தமிழக மக்களின் நலனை தான் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, தமிழக மக்களின் நலன் கருதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியான முடிவை எடுக்கும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான் அமையும் நிலை உள்ளது. எனவே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெறுகின்ற கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும். இதில், அ. ம. மு. க. வைச் சேர்ந்தவர்கள் எம். எல். ஏ. க்களாகவும், அமைச்சர்களாகவும் வர உள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி தொடர்பான அறிவிப்பு இந்த மாதத்துக்குள் வெளியிடப்படும்.
மேலும் படிக்க: திமுகவுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம்…ஆட்சியில் அதிகார பகிர்வு…காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்!
ஆண்டுதோறும் ரூ.11 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு உடனடியாக ரூ. 13 ஆயிரம் கோடியும், ஆண்டு தோறும் ரூ.11 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தாலும் சரி அல்லது புதிய ஆட்சியாளர்கள் வந்தாலும் சரி எப்படி இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்ய போகிறது என்பது தெரியவில்லை. கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி மாணவர்கள் தேர்தல் கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.
திமுக ஆட்சி முடிவுக்கு வரக் கூடிய நேரத்தில்
இதே போல, தற்போதும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. எந்த தரப்பில் இருந்து கருத்துக்கணிப்புகள் வெளிவந்தாலும், தமிழக மக்களின் கருத்துக்கணிப்பு என்ன என்பதை மே மாதம் தான் தெரியவரும். திமுக ஆட்சியை முடிவுக்கு வரக்கூடிய நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்
ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, திமுக ஆட்சி சரியாக செயல்படவில்லை எனில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்திக்கும். இதற்கு சாதகமாக தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்…மா.செக்கள் கூறியது என்ன…பிரேமலதா திட்டவட்ட பதில்!