‘முகத்தை மறைக்கவில்லை..கர்ச்சீப்பால் துடைத்தேன்’ எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி

Edappadi K. Palaniswami : அமித் ஷாவை சந்திக்க சென்றது வெளிப்படையானது என்றும் வெளியே வரும்போது முகத்தை துடைத்தேனே தவிர மறைக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இனிமேல் ரெஸ்ட் ரூம் போனால் கூட உங்களிடம் சொல்லிட்டு தான் போகணும் போல. அப்படிப்பட்ட நிலைக்கு இன்றைய அரசியல் சென்றுவிட்டது என்றும் கூறினார்.

முகத்தை மறைக்கவில்லை..கர்ச்சீப்பால் துடைத்தேன்’  எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி

எடப்பாடி பழனிசாமி

Updated On: 

18 Sep 2025 11:58 AM

 IST

சேலம், செப்டம்பர் 18 : டெல்லி பயணம், அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை 2025 செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று சந்தித்தார். அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், “அமித் ஷாவை சந்திக்க சென்றது வெளிப்படையானது. வெளியே வரும்போது முகத்தை துடைத்தேனே தவிர மறைக்கவில்லை. முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது. இனிமேல் ரெஸ்ட் ரூம் போனால் கூட உங்களிடம் சொல்லிட்டு தான் போகணும் போல. அப்படிப்பட்ட நிலைக்கு இன்றைய அரசியல் சென்றுவிட்டது, முகத்தை துடைத்ததை அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. ஒரு முதலமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். இவ்வாறு அவர் பேசுவது அவருக்கு அழகல்ல” என்று கூறினார்.

தொடர்ந்து  பேசிய அவர், ” திமுக ஆளுங்கட்சியான பிறகு, தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது யாரையெல்லாம் விமர்சித்தார்களோ அவர்களையே ரத்தனக் கம்பளம் வைத்து வரவேற்றனர். பிரதமரை அழைத்து கேலோ இந்திய, செஸ் ஒலிம்பியாட் உட்பட பல நிகழ்ச்சிகளை நடத்தியதையெல்லாம் பார்த்தோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு பலூன் விட்டனர். ஆளுங்கட்சியானவுடன் வெள்ளைக்குடை பிடித்தனர். இது தான் திமுவின் நிலைப்பாடு” என்று கூறினார்.

Also Read : செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷா உடனான சந்திப்பில் என்ன நடந்தது?

டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தொடர்ந்து டிடிவி தினகரன் முகமூடி எடப்பாடியானார் என விமர்சித்ததற்கும், எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், “ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். நான் முகமூடி அணியவில்லை, டிடிவி தினகரன் தான் முகமூடி அணிந்து அதிமுகவிற்குள் நுழைந்தார்.

அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதன் நோக்கம் எனக்கு தெரியவில்லை. ஜெயலலிதா  இருக்கும வரை சென்னை பக்கமே வராதவர். என்டிஏ கூட்டணியில் இருப்பதாகவும், கூட்டணியின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் ஏற்கனவே டிடிவி தினகரன் தெரிவித்த கருத்து ஊடகங்கள் வாயிலாக வந்தது. தற்போது, அவர் திடீரென முடிவை மாற்றிவிட்டார்” எனக் கூறினார்.

Also Read : எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை

”பாஜகவின் தலையீடு இல்லை”

உட்கட்சி பிரச்னை குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவிடம் பேசவில்லை. முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தவே அமித் ஷாவை சந்தித்தேன். தனது எழுச்சி பயணம் சிறப்பாக இருந்ததாக பாராட்டினார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என அமித் ஷா ஏற்கனவே கூறிவிட்டார். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தலைமைக் கழகம் முடிவு செய்யும். உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேச முடியாது” என்றார்.

தொடர்ந்து, 2025 செப்டம்பர் 17ஆம் தேதியான நேற்று முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி குறித்து முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியிருந்தார். இதுகுறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “இன்று செந்தில் பாலாஜியை பாராட்டும் இதே முதல்வர் தான், எதிர்க்கட்சியாக இருந்தபோது, செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும் கொள்ளை, கடத்தல் என கரூரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என விமர்சித்துள்ளார். இப்போது மட்டும் அவர் புனிதமாகிவிட்டாரா என்ன? அன்று ஊழல்வாதி என கூறிவிட்டு, இன்று அமைச்சர் பதவி கொடுத்தது எப்படி? ” என்று கூறினார்.