நீட் மறுதேர்வு: வார நாட்கள் அட்டவணைப்படி நாளை மின்சார ரயில்கள் இயக்கப்படும்..
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக 9 முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு ‘நீட் உதவி மையங்கள்’ அமைக்கப்பட உள்ளன. இந்த உதவி மையங்களில் ரயில் இணைப்பு வசதிகள், உள்ளூர் போக்குவரத்து சேவைகள், தேர்வு மையங்களை அடையும் வழிமுறைகள் உள்ளிட்ட பயணிகளுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
ஜூன் 20, 2026: ஜூன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நீட் (NEET-UG 2026) மறு தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர், பாதுகாவலர்களின் பயண வசதிக்காக சென்னை கோட்ட தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு மையங்களை அடையும் வகையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் பெரும்பாலான வழித்தடங்களில் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்கள் அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்:
அதன்படி, சென்னை புறநகர் ரயில் வழித்தடங்களில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சேவைகளுக்கு பதிலாக வார நாட்களில் இயக்கப்படும் கூடுதல் சேவைகள் வழங்கப்பட உள்ளன. இருப்பினும், அரக்கோணம் ரயில் நிலைய யார்டில் நடைபெற்று வரும் முன்-நான் இன்டர்லாக்கிங் (Pre-Non Interlocking) பொறியியல் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்/சென்னை கடற்கரை – அரக்கோணம் – திருத்தணி வழித்தடத்தில் தற்போதைய அட்டவணையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரையில் பரபரப்பு… அவனியாபுரத்தில் ஓட.. ஓட.. விரட்டி வாலிபர் படுகொலை.. தடுக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு!
மேலும், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் குளிர்சாதன (ஏசி) மின்சார ரயில்கள் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
நீட் உதவி மையங்கள்:
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக 9 முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு ‘நீட் உதவி மையங்கள்’ (NEET Help Desk) அமைக்கப்பட உள்ளன.
அவை:
- சென்னை சென்ட்ரல்
- சென்னை எழும்பூர்
- தாம்பரம்
- பெரம்பூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- ஆவடி
- திருவள்ளூர்
- காட்பாடி
இந்த உதவி மையங்களில் ரயில் இணைப்பு வசதிகள், உள்ளூர் போக்குவரத்து சேவைகள், தேர்வு மையங்களை அடையும் வழிமுறைகள் உள்ளிட்ட பயணிகளுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு மையங்களை எளிதாகவும், தாமதமின்றியும் சென்றடைய முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களுக்கு பயணிக்கும் மாணவர்களுக்கு இடையூறு இல்லாத, பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, நீட் மறு தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுப் பயணிகள் இந்த சிறப்பு ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.