கோவை மாணவி வழக்கில் திடீர் திருப்பம்… அதே நாளில் கொலை செய்ததும் விசாரணையில் அம்பலம் – விசாரணையில் பகீர் தகவல்
Coimbatore Student Case Twist: கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, குற்றவாளிகள் 3 பேரும் அதே நாளில் கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர், டிசம்பர் 2 : கோயம்புத்தூரில் (Coimbatore) கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர், அதே நாளில் ஆடு வியாபாரியை தாக்கி கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த நவம்பர் 2, 2025 அன்று கோயம்புத்தூர் விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாணவி வழக்கில் திடீர் திருப்பம்
குற்றவாளிகள் 3 பேரும் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றபோது, குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்கினர். இதனையடுத்து 3 பேரும் சுட்டுபிடிக்கப்பட்டனர். கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க : சென்னைக்கு 40 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எண்ணூரில் பதிவான 26 செ.மீ மழை..




இந்த நிலையில், கடந்த நவம்பர் 27, 2025 அன்று காவல்துறையினர் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது விசாரணையில் வெளியான புது தகவல் காவல்துறையினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. கோவை மாணவி வன்கொடுமை நடைபெற்ற அதே நவம்பர் 2, 2025 அன்று அன்னூர் அருகே ஆடு வியாபாரி தேவராஜை மூவரும் கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கின்றனர். இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொலை எப்படி நடந்தது?
கடந்த நவம்பர் 2, 2025 அன்றும் கோயம்புத்தூர் அன்னூர் அருகே செரையாம்பாளையம் அருகே மூவரும் மது அருந்திக்கொண்டிருந்திருக்கின்றனர். அது ஆடு வியாபாரி தேவராஜ் ஓய்வெடுக்கும் இடம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தேவராஜ் மூவரையும் அங்கிருந்த எழுந்திருக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் தேவராஜை குச்சியால் தாக்கி விட்டு தப்பி சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் தேவராஜ் மாயமானதாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதையும் படிக்க : பாதி வழியில் நின்ற மெட்ரோ ரயில்.. 500 மீட்டர் வரை ரயில் பாதையில் நடந்து சென்ற பயணிகள்..
இந்த நிலையில் கடந்த நவம்பர் 6, 2025 அன்று கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் தேவராஜின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. போலீசார் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என விசாரித்தனர். இந்த நிலையில் தான் மாணவி வழக்கில் விசாரித்தபோது அவர்களுக்கு உண்மை தெரிய வநத்திருக்கிறது. இந்த நிலையில் கோவில்பாளையம் காவல்துறையினர் மூவரையும் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
குற்றவாளிகள் 3 பேரும் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிறகு தான் கோவையில் அடுத்தடுத்த 2 பெரும் குற்றங்களை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.