ஒரே நாளில் 8 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட்…47 பேர் பணியிட மாற்றம்…கள்ளக்குறிச்சியில் அதிரடி நடவடிக்கை!
Panchayat Secretaries Suspended : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக 8 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், 47 ஊராட்சி செயலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொண்டதுடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் 8 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீலமங்கலம், பீளமேடு, வடமருதூர், வஞ்சிக்குழி, வட பொன் பரப்பி, பு. மலையனூர், சீர்பனந்தல், ராயப்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊராட்சி அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி செயலர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஊராட்சி எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஊராட்சி வரி வசூல் முறையாக செய்யப்படவில்லை எனவும், ஊராட்சி அலுவலகங்களில் உள்ள பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், ஊராட்சி செயலர்கள் மீது இருந்த புகார்கள் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், 8 ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணிகளில் மெத்தனமாக செயல்பட்ட ஊராட்சி செயலர்கள்
இதில், ஊராட்சி பகுதியில் முறையான வரி வசூல் செய்யாதது, வரி வசூலில் உரிய இலக்கை அடையாதது, ஊராட்சி அலுவலகங்களில் உள்ள பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது மற்றும் தங்களது பணிகளில் மெத்தனமாக செயல்பட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வடமருதூர் ஊராட்சி செயலர் மோகன், நீலமங்கலம் ஊராட்சி செயலர் கோவிந்தராஜு, வஞ்சிக் குழி ஊராட்சி செயலர் ராமக்கண்ணு, பீளமேடு ஊராட்சி செயலர் மாணிக்கம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரம்…தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீது பாய்ந்த நடவடிக்கை!
8 ஊராட்சி செயலர்கள் பணியிடை நீக்கம்
இதே போல, ராயப்பனூர் ஊராட்சி செயலர் ராஜவேலு, பு. மலையனூர் ஊராட்சி செயலர் ராமலிங்கம் மற்றும் சீர்பனந்தல் ஊராட்சி செயலர் குமார் ஆகிய 8 ஊராட்சி செயலர்களை அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதே போல, கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள 47 ஊராட்சி செயலர்கள் வேறு ஒன்றிய அலுவலகங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாயத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி
ஒரே நாளில், 8 ஊராட்சி செயலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், 47 ஊராட்சி செயலர்கள் வேறு ஒன்றியங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் அந்த துறை ஊழியர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது போன்று அரசுப் பணிகளில் மெத்தனமாக செயல்படும் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு திடீர் தடை…ரசிகர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசில்கள்…கடைகளிலும் விசில் விற்பனைக்கு நோ!