Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Covid 19: சென்னையில் கொரொனா தொற்றால் முதியவர் பலி? – சுகாதாரத்துறை விளக்கம்

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி பொருளாதாரம் வரை அனைத்தையும் இழந்து மக்கள் பரிதவித்தனர். இப்படியான தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Covid 19: சென்னையில் கொரொனா தொற்றால் முதியவர் பலி? – சுகாதாரத்துறை விளக்கம்
கொரோனா தொற்றால் முதியவர் பலி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 28 May 2025 18:28 PM

தமிழ்நாடு, மே 28: சென்னையில் கொரோனா தொற்றால் (Corona Virus) முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக நாடுகளையே கடுமையாக அச்சுறுத்திய கொரோனா வைரஸ் (Covid-19) பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்றளவும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறையும் விழிப்புடன் செயல்பட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் 60 வயது முதியவர் ஒருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

கொரோனா உயிரிழப்பு குறித்து விளக்கம்

சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த மோகன் என்ற முதியவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அறிகுறிகள் தென்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சைக்காக வீட்டில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 60 வயதான மோகன், நீரிழப்புடன் கூடிய கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப் பரிந்துரைக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஸ்டேஜ் 4 இருந்தது. மேலும் வயிற்றுப்போக்கு பிரச்னை காரணமாக அவர் 2025, மே 15 அன்று கே.கே. நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, வயிற்றுப்போக்கு சரியாகி, சிறுநீரக செயலிழப்புக்காக டயாலிசிஸூம் செய்யப்பட்டது.

ஆனால் மருத்துவமனையில் இருந்த காலத்தில் 2025, மே 26 அன்று அவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவர், மே 27 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இரவு 7.30 மணிக்கு அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற தொடர்புடைய நோய்களின் சிக்கல்களால் மரணம் ஏற்பட்டதாகவும், கொரோனா தற்செயலாக கண்டறியப்பட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் பரவுவதாக சொல்லப்படும் கொரோனா நோய்த்தொற்று ஓமிக்ரானின் திரிபு என மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட்ட தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத்

அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து வருமாறு சில மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 2025, மே 26 நிலவரப்படி இந்தியாவில் 1000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஹாங்காங், தாய்லாந்து ,சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் உஷார் படுத்தப்பட்ட நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. என்னதான் அரசு மக்களை பீதியடைய வேண்டாம் என நம்பிக்கை அளித்து அறிவுறுத்தினாலும், கொரோனா 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய இழப்பிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.