காட்டுக்குள் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. 6 தனிப்படைகள் அமைப்பு!
Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறுது. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி மாணவி பாலியல் கொலை சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைப்பு
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அந்த தேர்வுகளை மாணவி எழுதியிருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவி இயற்கை உபாதை களிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தப் பகுதிகளில் தேடி உள்ளனர். ஆனால், மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், மாணவி மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
கொலை சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைப்பு
இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக 6 தனிப்படைகளை அமைத்து திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் உத்தரவிட்டார். இந்த நிலையில், புகாரை பெறவில்லை என புகார் எழுந்தந நிலையில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு கனிமொழி எம்பி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தட்டுப்பாடு அச்சம்.. பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. கேன்கள், பக்கெட்டுகளில் நிரப்பிச் செல்வதால் பரபரப்பு..
கொடுங்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை
அதில், விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைப்பதற்கு துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட கண்டன பதிவில், மாணவி மாயமானது தொடர்பாக பெற்றோர் புகார் அளித்தும் அதனை குளத்தூர் மற்றும் விளாத்திகுளம் மகளிர் போலீசார் அலட்சியம் செய்து உள்ளனர். இதில், போலீசார் விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் அந்த மாணவியை காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கொலை சம்பவத்தில் போலீசார் மெத்தனப்போக்கு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன பதிவில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு பாதுகாப்பின்மை தினந்தோறும் செய்தியாகிவிட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளனர். இந்த வெட்கக்கேடான செயல் திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கொலை
அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன பதிவில், திறனற்ற திமுக ஆட்சியின் கையாலாகாத தனத்தால் இன்னும் எத்தனை மக்கள் பாதிக்கப்பட போகிறார்கள். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நெஞ்சை பதை பதைக்க வைப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல, மற்ற கட்சிகளின் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: இலங்கை கடற்படையினர் தொடர் அத்துமீறல்… ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது… படகு-மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல்!