விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. நொடிப்பொழுதில் பறிபோன 22 உயிர்கள்.. பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!
Virudhunager Fire Factory Accident: விருதுநகர் மாவட்டத்தில் வச்சாரப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த கொடூர விபத்தில் 22 தொழிலாளர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில், அந்த மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆண் மற்றும் பெண்கள் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் முத்து முனியான்டி என்பவருக்கு சொந்தமான வனஜா என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள், வழக்கம் போல இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 19) காலை வேலைக்கு வந்தனர். அவர்கள், அந்தந்த ஆலையில் உள்ள கட்டடங்களில் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், திடீரென அந்த பட்டாசு ஆலையின் ஒரு பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், 4 கட்டடங்கள் உருக்குலைந்தன.
மேலும் படிக்க: “தவெகவினர் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்”.. அன்புமணி ராமதாஸ் வைத்த வேண்டுகோள்!!
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்
இதில், சுமார் 20- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரை பட்டாசு ஆலையின் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஓரளவு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர், அந்த கட்டிடத்தின் உள்ளே சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி இரங்கல்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: பிரதமர் @narendramodi
— PMO India (@PMOIndia) April 19, 2026
இது குறித்து பிரதமர் மோடி தனது இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டிலன் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த மன வேதனையளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் இரங்கல்
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல்…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 19, 2026
22 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
இதில், 22 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 5- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, வெடி விபத்தில் உயிரிழந்த 22 பேரின் சடலங்கள் உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த தனியார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டாசு ஆலைக்கு தொழிலாளர்கள் வழக்கம் போல வேலைக்கு சென்ற நிலையில், திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 22 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வீட்டிலேயே பிரசவம்.. தாய் – சேய் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழப்பு.. பதறவைக்கும் சம்பவம்!