2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி.. டிடிவி தினகரன் ஆருடம்!
விஜய் தலைமையிலான கூட்டணி அமைந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்று டிடிவி தினகரன் ஆருடம் கூறியுள்ளார். அதேசமயம், கூட்டணி குறித்து தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், வெற்றி பெறும் கட்சியுடன் தான் தனது கூட்டணி இருக்கும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.
சென்னை, நவம்பர் 06: விஜய்யின் வருகையால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும், இத்தேர்தலில் திமுக கூட்டணிக்கும் – தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஏற்கெனவே, பாஜக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறிய நிலையில், டிடிவி தினகரனின் இந்த பேச்சு அரசியலில் பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் விஜய் கூட்டணியில் அமமுக இடம்பெறலாம் என்றும், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு ஏற்ற புதிய கூட்டணியாக அவர் விஜய்யை பார்ப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Also read: நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? விஜய் ஆவேசம்!
2 கட்சிகளிடையே தான் போட்டி என விஜய் பேச்சு:
முன்னதாக, சென்னையில் நேற்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.மேலும், 2026ல் இரண்டே இரண்டு கட்சிக்கு தான் போட்டியே ஒன்று தவெக, இன்னெற்று திமுக என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




குறிப்பாக, விஜய்யுடன் கூட்டணி அமைக்க முயன்று வந்த பாஜக, அதிமுக போன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என விஜய் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தவகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விஜய்யின் கருத்தை அமோதித்து, இரு கட்சிகள் இடையே தான் போட்டி என்று உறுதியாக கூறியுள்ளார்.
விஜய் கூட்டணி அமைத்தால் கடும் போட்டி:
மேலும் பேசிய அவர், தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக நான் சொல்லவில்லை. யதார்த்தமாக, சாதாரண குடிமகனாக பதில் சொல்கிறேன். விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டி நிலவும் என்று ஆருடம் கூறியுள்ளார். அதோடு, கூட்டணி குறித்து சில கட்சிகள் தன்னை அணுகியதாகவும், அதுகுறித்து தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் உடன் சேர வாய்ப்பே இல்லை:
ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்ததாக இபிஎஸ் கூறுகிறார். யார் துரோகம் செய்தார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக தான் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு இபிஎஸ் செயல்படுகிறார். இபிஎஸ் உடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை. என்றுமே டிடிவி தினகரன், இபிஎஸ்-க்கு சிம்ம சொப்பனம்தான். துரோகத்தை வீழ்த்தாமல் யார் தடுத்தாலும் நான் ஓயமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.