தாய்ப்பால் குடிக்கும்போது நடந்த விபரீதம்.. பரிதாபமாக பலியான 2 நாட்களே ஆன பெண் குழந்தை!
2 Days Old Infant Died While Drinking Milk | சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், அந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சு திணறி பரிதாபமாக பலியாகியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளசரவாக்கம், நவம்பர் 21 : சென்னை (Chennai) வளசரவாக்கத்தில் உள்ள கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் பிரதீப் குமார். 35 வயதாகும் இவருக்கு, ராஜேஸ்வரி என்ற 30 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ராஜேஸ்வரிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், தாயும் சேயும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தாய் பால் குடிக்கும்போது மூச்சு திணறி பலியான பச்சிளம் குழந்தை
இந்த நிலையில், நேற்று (நவம்பர் 20, 2025) காலை ராஜேஸ்வரி தனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது குழந்தை திடீரென மூச்சு விட சிரமப்பட்டுள்ளது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அறிந்த ராஜேஸ்வரி உடனடியாக மருத்துவர்களை அழைத்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் வந்து குழந்தையை பரிசோதனை செய்த போது, குழந்தை ஏற்கனவே மூச்சு திணறி பலியானதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : தூத்துக்குடியில் சோகம்… சாலை விபத்தில் 3 பயிற்சி மருத்துவர்கள் பலி – 2 பேர் படுகாயம்
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாய் பால் குடிக்கும் போது மூச்சு திணறி தான் குழந்தை உயிரிழந்துள்ளதா அல்லது குழந்தையின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவது ஏன்?
தாய்மார்களின் மார்பகங்களில் இருந்து பால் வேகமாக வெளியேறுவது, தாய்ப்பால் குழந்தைகளின் சுவாச பாதைக்குள் பாய்வது ஆகியவை குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு தாய்ப்பால் குடிக்கும்போது பச்சிளம் குழந்தைகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.