Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறுமி தற்கொலை முயற்சி – காரணம் இதுவா?

Shocking Incident : சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சிறுமி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாய் மறுமணம் செய்துகொண்ட நிலையில் சிறுமையை காப்பகத்தில் சேர்க்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், சிறுமி இத்தகைய விபரீத முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறுமி தற்கொலை முயற்சி – காரணம் இதுவா?
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிறுமி தற்கொலை முயற்சி
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Aug 2025 17:43 PM

சென்னை, ஆகஸ்ட் 12: சென்னை உயர் நீதிமன்றத்தின் (Madras High Court) மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக ஆஜரான சிறுமி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படுகாயம் அடைந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தமானைச் (Andaman) சேர்ந்த சிறுமியின் தாய் மறுமணம் செய்ததால் அரசு காப்பகத்துக்கு செல்ல நீதிபதி உத்தரவிட்டார். காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதால் விரக்தியில் மாடியிலிருந்து குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அந்தமானைச் சேர்ந்த 15 வயது சிறுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறுமியின் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதன் காரணமாக அவரது தந்தை இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சிறுமியின் தற்கொலை முயற்சிக்கு காரணம்

இதில் விருப்பமில்லாத சிறுமி, தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஜூடோ பயிற்சியாளர் குற்றவாளி என தீர்ப்பு

சமீப காலமாக குழந்தைகளின் தற்கொலை செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் கும்பகோணத்தில் நடந்திருக்கிறது. கும்பகோணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பெற்றோர் இல்லாததால் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட, அவரை திருக்கனூர்பட்டியில் உள்ள குழந்தைகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் அங்கு தான் தங்கியிருந்த அறையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் தற்கொலை.. ஐடி ஊழியரின் சோக முடிவு!

பொதுவாக பெற்றோர்களின் பிரச்னைகள் குழந்தைகளுக்கு உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளின் முன் சண்டையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பெற்றோர்களின் பிரிவு, மரணம் போன்றவை குழந்தைகளுக்கு உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே அவர்களை சரியான வகையில் கையாள வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

(எந்த ஒரு பிரச்னைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் மாநில சுகாதார உதவி எண் 104, சினேகாவின் தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றை தொடர்புகொண்டு  உதவி பெறலாம். )