அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு.. இபிஎஸ் களம் இறங்க 2,187 பேர் விருப்பம்!!
AIADMK assembly elections applications forms: விருப்ப மனு பெறுவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, விருப்ப மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை டிச.31-ம் தேதி வரை அதிமுக நீட்டித்தது. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

கோப்புப் புகைப்படம்
சென்னை, ஜனவரி 02: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி முடிந்துள்ளது. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதில், 2,000க்கும் மேற்பட்டோர் தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி களம் இறங்குமாறு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அக்கட்சிக்கு பெருமளவு நிதி கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, விருப்ப மனுக்களை பரிசீலிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், வரும் நாட்களில் அடுத்தடுத்து வேட்பாளர்கள் நேர்முகத் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்று, விரைவில் வேட்பாளர்கள் தேர்வு இறுதி செய்யப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு….பிரேமலதா விஜயகாந்த்!
தேர்தல் பணிகளில் அதிமுக தீவிரம்:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம் – தமிழ்நாட்டை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தொகுதிவாரியாக பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை மாநிலம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து தேர்தல் தயாரிப்புகளை ஆய்வு செய்துள்ளார். மேலும், தேர்தல் அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கூட்டணி பேச்சுவார்த்தைகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மீண்டும் தேமுதிக, பாமகவை கூட்டணியில் இணைப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வரை அதிமுகவுடன் பாஜகவும், தமாகவும் மட்டுமே கூட்டணியை இறுதி செய்துள்ளது. இதன் காரணமாக, பாஜக அதிக தொகுதிகளை கேட்டு அக்கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிச.23ம் தேதி வரை 9,000 பேர் விருப்ப மனு:
கடந்த டிச.15 முதல், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. அந்த மனுக்களில் 25 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பொது மற்றும் தனித்தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்கள் பெறப்பட்டன. புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி பெறப்பட்டன. இதில், முதல் நாளில் மட்டும் 1,237 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கினர். அதில் 349 பேர், தங்கள் தொகுதியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளித்திருந்தனர். இதனிடையே, டிச.23ஆம் தேதி வரை விருப்பமனுக்கள் பெறப்பட்டன. அதுவரை சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
விருப்ப மனு மூலம் ரூ.15 கோடி வசூல்:
தொடர்ந்து, விருப்ப மனு பெறுவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, விருப்ப மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை டிச.31-ம் தேதி வரை அதிமுக நீட்டித்தது. அதன்படி, கடந்த டிச.27 முதல் டிச.31ம் தேதி (நேற்று முன்தினம்) வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். ஒவ்வொரு மனுவுக்கும் நிர்ணயிக்கப்பட்ட ரூ.15,000 கட்டணத்தின் மூலம், ரூ.15 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரம் கட்சிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க : 2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய் “போதையில்லா தமிழகம்”…பங்கமாய் கலாய்த்த தமிழிசை!
இபிஎஸ் போட்டியிட 2,187 மனுக்கள்:
இதில் முக்கியமாக, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட வேண்டும் என கோரியும் தனியாக 2,187 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மட்டும் ரூ.3 கோடியே 28 லட்சத்து 5 ஆயிரம் கிடைத்துள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.