WTC 2025-27 Points Table: WTC புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்.. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா..?
World Test Championship 2025-27: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளன. புள்ளிகள் அட்டவணை, வெற்றி, தோல்வி, டிராக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்னும் போட்டியில் இறங்கவில்லை.

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்து, 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி (WTC 2025-27) தொடங்கிவிட்டது. ஒருபுறம் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் (India – England Test Series) நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா – ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் – இலங்கை டெஸ்ட் தொடர்களும் நடைபெற்று வருகின்றன. இந்த பல டெஸ்ட் தொடர்களுக்கு மத்தியில், புள்ளிகள் அட்டவணையிலும் அணிகள் புள்ளிகளை பெற தொடங்கிவிட்டன. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை மொத்தம் 8 அணிகள் 2025-27 சுழற்சிக்காக குறைந்தது ஒரு போட்டியையாவது விளையாடியுள்ளன. இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. அதிலும், தோல்வியை சந்தித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிகள் அட்டவணை:
WTC 2025-27 Points Table. pic.twitter.com/7shUVrnga3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 28, 2025
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி 2வது இடத்திலும், இந்திய அணி தற்போது ஐந்தாவது இடத்திலும் உள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் இலங்கை தற்போது 3வது இடத்தில் உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 2 போட்டிகளில் ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் தற்போது 4வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது 6வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இந்த சுழற்சியில் இதுவரை எந்த போட்டியிலும் விளையாடவில்லை.




உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் முறையின்படி, ஒரு அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளும், டிரா ஏற்பட்டால் 6 புள்ளிகளும், டை ஆனால் தலா 4 புள்ளிகளும் வழங்கப்படும். அதன்படி, அணிகளின் தரவரிசை புள்ளிகளின் சதவீதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
WTC 2025 இறுதிப் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா:
சில நாட்களுக்கு முன்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025ன் இறுதிப் போட்டி நடைபெற்றது, இதில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அதற்கு முன்பு, இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தலா ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளன.