Smriti Mandhana’s Century: இங்கிலாந்துக்கு எதிராக டி20யில் சதம்.. பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கிய ஸ்மிருதி மந்தனா!
India Women Win 1st T20 Against England: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் கேப்டன் ஸ்மிருதி மந்தனா. அவர் 51 பந்துகளில் சதம் அடித்து இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார். இது அவரது டி20 சர்வதேச போட்டியில் முதல் சதம் மற்றும் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுத் தந்தது.

ஸ்மிருதி மந்தனா
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஆண்கள் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான தொடக்கத்தை பெற்றாலும், 19 வயதுக்குட்பட்ட அணியும், தற்போது மகளிர் அணியும் அந்தந்த அணிகளுக்கு சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளன. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று அதாவது 2025 ஜூன் 28ம் தேதி டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் தொடங்கியது. மகளிர் டி20 தொடரின் முதல் போட்டியில், ஸ்மிருதி மந்தனாவின் (Smriti Mandhana) சாதனை சதத்தால் இந்திய அணி போட்டியை நடத்தும் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. நாட்டிங்ஹாமில் நடந்த போட்டியில், இந்திய மகளிர் அணி (India Women’s National Cricket Team) 97 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியுடன் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில், அணியின் தலைவராக இருந்த மந்தனா, டி20 சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். இதன்மூலம், ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனை:
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்துடன் தொடங்கியது. டிரென்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில், ஸ்மிருதி மந்தனா 112 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். இது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆகும்.
- இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கிய ஸ்மிருதி மந்தனா, வெறும் 51 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் முறையாக சதம் அடித்தார். இந்தியாவுக்காக டி20 சதம் அடித்த இரண்டாவது பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முன்பு, கடந்த 2018ம் ஆண்டு ஹர்மன்ப்ரீத் கவுர் (103) சதம் அடித்திருந்தார்.
சர்வதேச டி20யில் முதல் சதம்:
1️⃣1️⃣2️⃣ runs
6️⃣2️⃣ deliveries
1️⃣5️⃣ fours
3️⃣ sixesAn innings of the highest calibre from Captain Smriti Mandhana 👏
Scorecard ▶️ https://t.co/iZwkYt8agO#TeamIndia | #ENGvIND | @mandhana_smriti pic.twitter.com/ZkiIErL1kI
— BCCI Women (@BCCIWomen) June 28, 2025
- 3 வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களும் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவங்களிலும் சதம் அடித்த 5வது பெண் கிரிக்கெட் வீரர் இவர்தான்.
- டிரென்ட் பிரிட்ஜில் டி20 சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். இந்த ஸ்டேடியத்தில் இந்த சாதனையைச் செய்த 2வது இந்திய கிரிக்கெட் வீரர் இவர்தான். இவருக்கு முன்பு, 2022ம் ஆண்டில் 117 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
- ஸ்மிருதி மந்தனா தனது இன்னிங்ஸில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம், ஒரு டி20 சர்வதேச இன்னிங்ஸில் அதிக பட்சம் 18 பவுண்டரிகளை அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். ஹர்மன்ப்ரீத் கவுரின் (15) சாதனையை மந்தனா முறியடித்தார்.