IND W vs ZIM W: இனி முழுநேர கேப்டன்.. பொறுப்பு குறித்து வெளிப்படையாக பேசிய ஸ்மிருதி மந்தனா!
Smriti Mandhana Captaincy: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனா ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகிறார். அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட்டை அடுத்த 2-3 ஆண்டுகளில் முன்னோக்கி கொண்டு செல்வதே நோக்கம் என மந்தனா கூறியுள்ளார். ஹர்மன்பிரீத் கவுரின் அனுபவம் அணிக்கு அவசியம் என்றும், மூன்றாம் வரிசை பேட்டிங் குறித்து பல தேர்வுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் (IND W vs ZIM W) இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி முதல் இந்திய மகளிர் அணியின் முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) தனது பயணத்தை தொடர்கிறார். இந்திய மகளிர் அணியில் கடந்த 10 ஆண்டுகளாகத் துணை கேப்டனாகப் பணியாற்றியுள்ள ஸ்மிருதி மந்தனா, தலைமைப் பொறுப்பில் நெருக்கமாக ஈடுபட்டு, கடந்த காலங்களில் பலமுறை இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். எனவே, ஸ்மிருதி மந்தனா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இதுகுறித்து மந்தனா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ALSO READ: இன்னும் 133 ரன்கள் மட்டுமே… உலக சாதனையின் விளிம்பில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா!
தலைமை மாற்றம் குறித்து மந்தனா பேசியது என்ன..?
கேப்டன் ஆன பிறகு ஏற்பட்ட தலைமை மாற்றம் குறித்துப் பேசிய ஸ்மிருதி மந்தனா, “அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதில் எங்கள் கவனம் உள்ளது. பல பெரிய போட்டிகள் வரவிருக்கின்றன. முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ட்ரெஸ்ஸிங் அறையில் தொடர்ந்து முக்கியப் பங்கு இருக்கும். அவரது அனுபவம் அணிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். கேப்டன் பதவியின் அழுத்தத்திலிருந்து விடுபட்ட பிறகு, அவர் பேட்டிங்கில் இன்னும் அபாயகரமானவராக உருவெடுக்க முடியும். கேப்டன்ஷி என்பது முற்றிலும் புதியது என்று நான் கூற மாட்டேன், ஆனால் இது நிச்சயமாக ஆவலுடன் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. இந்தப் பொறுப்பிற்கு என்னால் முயன்றதை செய்ய முடியும் என்று நம்புகிறேன்,” என்றார்.




3வது வரிசையில் விளையாடப்போவது யார்..?
மூன்றாவது பேட்டிங் வரிசைதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ள நிலையில் இது குறித்து பேசிய மந்தனா கூறுகையில், “ஜெமிமா கடந்த இரண்டு மாதங்களாகக் காயத்தால் அவதிப்படுகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அனுஷ்கா ஷர்மா மற்றும் நிக்கி பிரசாத் போன்ற சில அற்புதமான வீராங்கனைகள் எங்களிடம் உள்ளனர். நிச்சயமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3வது இடத்தில் பேட் செய்த கமாலினியும் இருக்கிறார். எனவே, எங்களிடம் ஏராளமான தேர்வுகள் உள்ளன,” என்றார்.
ALSO READ: சர்வதேச டி20யில் முதல் முறை மோதல்.. இந்திய மகளிர் – ஜிம்பாப்வே மகளிர் யாருக்கு வெற்றி?
இந்திய கேப்டன் தற்போது அணிக்கு புதிய தரநிலைகளை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக டி20 வடிவத்தில் இன்னும் முன்னேற்றத்திற்கு இடமுள்ளது என்று பேசிய துணை கேப்டன் ஷஃபாலி வர்மா, “டி20 போட்டிகளில் நாம் அச்சமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும், அதே சமயம் புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும். இது குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம்.” என்றார்.