Youngest Indian Test Captains: பட்டோடி முதல் கில் வரை.. இளம் வயதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த வீரர்கள்..!
Shubman Gill: ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சுப்மன் கில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்திய அணியில் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பு வகித்த இளம் வீரர்களின் பட்டியலில், சுப்மன் கில் 5வது இடத்தைப் பிடிக்கிறார். மன்சூர் அலி கான் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி ஆகியோர் முந்தைய சாதனை படைத்தவர்கள் ஆவர்.

ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பிறகு, இந்தியாவின் 37வது டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்தனர். இதனால், முற்றிலும் இளம் அணியை கொண்ட இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. இதன்மூலம், இந்திய அணிக்காக இளம் வயதில் கேப்டன் பதவியை வகிக்கும் சாதனையை சுப்மன் கில் (Shubman Gill) பெறப்போகிறார். இந்தநிலையில், இந்திய அணிக்காக இதுவரை இளம் டெஸ்ட் கேப்டனாக இருந்த வீரர்கள் பட்டியலை இங்கே தெரிந்துகொள்வோம்.
இளம் கேப்டன்:
ஐபிஎல் 2025 சீசன் முடிந்ததும் 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தும் சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைமை வகித்த 5வது இளைய கேப்டன் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். 2025 மே மாத தொடக்கத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, 25 ஆண்டுகள் மற்றும் 285 நாட்களில், பஞ்சாபில் பிறந்த சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
சுப்மன் கில்லுக்கு முன்னதாக பல இளம் இந்திய வீரர்கள் கேப்டனாக இருந்துள்ளனர். அதன்படி, டெஸ்ட் அணியை வழிநடத்திய இளம் வீரர் என்ற சாதனையை முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடி படைத்துள்ளார். இவர் கடந்த 1962ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெறும் 21 ஆண்டுகள் 77 நாட்களில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
இந்திய அணியின் இளம் டெஸ்ட் கேப்டன்கள்:
மன்சூர் அலி கான் பட்டோடி – 21 ஆண்டுகள், 77 நாட்கள் (எதிரணி – வெஸ்ட் இண்டீஸ், பிரிட்ஜ்டவுன், மார்ச் 23, 1962)
சச்சின் டெண்டுல்கர் – 23 ஆண்டுகள், 169 நாட்கள் (எதிரணி – ஆஸ்திரேலியா, டெல்லி, அக்டோபர் 10, 1996)
கபில் தேவ் – 24 ஆண்டுகள், 48 நாட்கள் (எதிரணி – வெஸ்ட் இண்டீஸ், கிங்ஸ்டன், பிப்ரவரி 23, 1983)
ரவி சாஸ்திரி – 25 ஆண்டுகள், 229 நாட்கள் (எதிரணி – வெஸ்ட் இண்டீஸ், சென்னை, ஜனவரி 11, 1988)
சுப்மன் கில் – 25 ஆண்டுகள், 285 நாட்கள் (எதிரணி – இங்கிலாந்து, லீட்ஸ், ஜூன் 20, 2025)
இங்கிலாந்து தொடருக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்/துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.