IND vs ENG 1st Test: 99 ரன்களில் அவுட்டான ஹாரி ப்ரூக்.. விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா!

Harry Brook out on 99 Runs: லீட்ஸில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், பிரசித் கிருஷ்ணா ஹாரி புரூக்கை 99 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 ரன்களில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்த இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. முன்னதாக, அனில் கும்ப்ளே இந்த சாதனையைப் படைத்திருந்தார். இந்த சாதனையால் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

IND vs ENG 1st Test: 99 ரன்களில் அவுட்டான ஹாரி ப்ரூக்.. விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா!

ஹாரி புரூக் - பிரசித் கிருஷ்ணா

Published: 

22 Jun 2025 21:05 PM

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான (IND vs ENG 1st Test) முதல் டெஸ்ட் போட்டி தற்போது லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 3வது நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சிறப்பு சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு, இந்த சாதனையை ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் மட்டுமே செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லீட்ஸ் முதல் டெஸ்டின் 3வது நாளில், ஹாரி புரூக் (Harry Brook) தனது டெஸ்ட் வாழ்க்கையின் 9வது சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். ஆனால் 99 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா (Prasidh Krishna) பந்தில் ஷர்துல் தாகூரிடன் கேட்ச் ஆனார். ஹாரி புரூக் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 99 ரன்கள் எடுத்து அவுட் ஆனது இதுவே முதல் முறை. இதன் மூலம் பிரசித் கிருஷ்ணா ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார்.

99 ரன்களில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்த இரண்டாவது இந்தியர்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 99 ரன்களில் அவுட்டான இரண்டாவது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் ஆவார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக 99 ரன்களில் அவுட்டான முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் ஆவார். இவர் 2001ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளேவால் ஆட்டமிழந்தார். இப்போது, ​​ஹாரி புரூக்கை 99 ரன்களில் அவுட்டாக்கியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஒரு இங்கிலாந்து பேட்ஸ்மேன் சதம் அடிப்பதை ஒரு ரன் வித்தியாசத்தில் தடுத்த இரண்டாவது இந்திய பவுலர் என்ற பெருமையை பிரசித் கிருஷ்ணா பெற்றுள்ளார்.

யார் இந்த பிரசித் கிருஷ்ணா..?

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஆனால் இன்னும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. 4 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இது அவரது மூன்றாவது விக்கெட் ஆகும்.

ஹாரி ப்ரூக் விக்கெட்டுடன் இங்கிலாந்து அணிக்கு 7வது விக்கெட் வீழ்ந்தது. தொடர்ந்து, பிரைடன் கார்ஸ் 22 ரன்களில் முகமது சிராஜிடம், கிறிஸ் வோக்ஸ் 38 ரன்களிலும், தங் 11 ரன்களில் பும்ரா பந்திலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். சோயிப் பஷீர் 1 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.