Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs AUS: கேப்டன் பதவி போதும்! நீக்கப்பட்ட ரோஹித் சர்மா.. காரணம் என்ன?

Indian Cricket Team ODI Captain: தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மாவுக்கு 2027ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியின்போது 40 வயதாகும். அதுவரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விரைவில் கோலி மற்றும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

IND vs AUS: கேப்டன் பதவி போதும்! நீக்கப்பட்ட ரோஹித் சர்மா.. காரணம் என்ன?
ரோஹித் சர்மாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Oct 2025 20:03 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு (IND vs AUS) எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அதாவது 2025 அக்டோபர் 4ம் தேதி அறிவித்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் வெளியிட்டுள்ளார். இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி முதல் 25 வரை சிட்னி, அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்.

அஜித் அகர்கர் விளக்கம்:

ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அஜித் அகர்கர் கூறுகையில், “3 வடிவங்களுக்கும் 3 கேப்டன்களை வைத்திருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. மேலும், தற்போது ஒருநாள் போட்டிகள் மிக குறைவாகவே விளையாடப்படுகிறது. அசுத்ததாக டி20 உலகக் கோப்பைக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே, சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதே சரியான திட்டம்” என்றார்.

2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு, அடுத்ததாக 2027 ஒருநாள் உலகக் கோப்பை விளையாடப்படவுள்ளது. இந்த காலம் வரை ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகத்திற்குரியது. கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போதிலும், ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்ந்தார். அதன்பிறகு, 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர்ந்து, 2025ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 2021ம் ஆண்டில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, 56 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கி 46 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.

ALSO READ: வீரராக ரோஹித் சர்மா! கேப்டனாக இளம் வீரர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ரோஹித் சர்மா வயது:

தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மாவுக்கு 2027ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியின்போது 40 வயதாகும். அதுவரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விரைவில் கோலி மற்றும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடர் இருவருக்கும் கடைசி ஒருநாள் தொடராக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி , வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா , முகமது சிராஜ் , அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல் , யஷஸ்வி ஜெய்ஸ்வால்