2027 World Cup: ரோஹித், விராட்டுக்கு இடம் வேண்டும்.. பிசிசிஐயை வற்புறுத்தும் முன்னாள் தேர்வாளர்!
Virat Kohli - Rohit Sharma: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு அனுபவ வீரர்களுடன், மிடில் ஆர்டரில் உள்ள வீரர்களான சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் மட்டுமே தற்போது வரை உறுதியான இடத்தை பிடித்துள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் போன்றவர்கள் இந்தியாவுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
2027ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) இடம்பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வாளர்களிடம் முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் தேவாங் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும், இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்று அசத்தியது. இதற்கு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் செயல்திறனும் ஒரு காரணமாகும்.
ALSO READ: தலையிடாதீங்க – செய்தியாளர்கள் சந்திப்பில் கொதித்து பேசிய கம்பீர்!
சிறப்பாக ஆடும் ரோஹித், கோலி:
சமீப காலமாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் செயல்திறன் அபாரமாக இருந்து வருகிறது. அதாவது கடந்த 6 போட்டிகளில் ரோஹித் மற்றும் கோலி இணைந்து சுமார் 700 ப்ளஸ் ரன்களை எடுத்துள்ளனர். இந்தநிலையில், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஐ.சி.சி போட்டிக்கு இன்னும் 22 மாதங்கள் மீதமுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம்பெற வேண்டும் என முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் தேவாங் காந்தி தெரிவித்துள்ளார்.




என்ன சொன்னார் தேவாங் காந்தி..?
2027 ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அடித்தளமாக ரோஹித் சர்மா, விராட் கோலி இருக்க வேண்டும் என்று தேவாங் காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,”விராட் கோலியும் ரோஹித்தும் இருக்கும் வரை, 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அவர்களை சுற்றியே இருக்க வேண்டும். அணி தேர்வின்போது பிசிசிஐ தேர்வுக்குழு 20 வீரர்களுக்கு மேல் இல்லாத ஒரு அணியை திட்டமிட வேண்டும். 2019 உலகக் கோப்பைக்கு முன்னதாக, யார் 4வது இடத்தில் களமிறங்குவார்கள் என்பது தெரியவில்லை. 4வது இடத்தில் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாகதான், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் டாப் ஆர்டர் சரிந்தபோது, 4வது இடம் வலுவானதாக இல்லை.
2023 உலகக் கோப்பையிலும் இதேதான் நடந்தது. ஒருநாள் போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனை இல்லாத சூர்யகுமார் யாதவை அணி நிர்வாகம் விளையாட கட்டாயப்படுத்தியது.” என்று தெரிவித்தார்.
இந்திய அணி எப்படி இருக்கும்..?
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு அனுபவ வீரர்களுடன், மிடில் ஆர்டரில் உள்ள வீரர்களான சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் மட்டுமே தற்போது வரை உறுதியான இடத்தை பிடித்துள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் போன்றவர்கள் இந்தியாவுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.அதே நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இந்த தொடரில் தங்கள் முதல் சதங்களை பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ரிஷப் பந்த் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற பல வீரர்கள் தற்போது வரை இடத்தை உறுதி செய்யவில்லை.