இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் விலை உயர்வு – ஒரு போட்டிக்கு இத்தனை கோடியா?
Sponsorship Deal: இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் விலையை பிசிசிஐ அதிகரித்துள்ளது. முந்தைய ஸ்பான்சரான டிரீம் 11 செலுத்திய தொகையை விட 10 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதனால் இந்திய அணியின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும்ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஆசிய கப் (Asia Cup) போட்டிகள் வருகிற செப்டம்பர் 9, 2025 முதல் துவங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் ஜெர்சியில் பெயர் அச்சிடும் உரிமையைப் பெற புதிய ஸ்பான்சர்கள் அதிக தொகையை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்ட கட்டுப்பாட்டு வாரியம், 3 ஆண்டுக்கான ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்துக்கான அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு போட்டிக்கும் நிர்ணயிக்கப்பட்ட புதிய விலை
இரு தரப்பு போட்டிகளின்போது அதாவது ஒரு குறிப்பிட்ட அணியுடன் விளையாடும் போட்டிகளின் போது ஒரு போட்டிக்கு ரூ.3.5 கோடி விலையாக செலுத்த வேண்டியிருக்கும். அதே போல பல தரப்பு போட்டிகளுக்கு அதாவது ஆசிய கப் போன்று பல அணிகள் பங்கேற்கும் போட்டிகளின்போது ரு போட்டிக்கு ரூ.1.5 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.
இதையும் படிக்க : இந்திய அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எது..? ஏல திட்டத்தை வகுத்த பிசிசிஐ!




முன்னதாக டிரீம் 11 இந்திய அணியின் ஸ்பான்சராக இருந்தது. அந்த அணி இருதரப்பு போட்டிகளுக்கு ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்புக்காக செலுத்திய தொகையை விட தற்போது 10 சதவிகிதம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். அது போல டிரீம் 11 பல தரப்பு போட்டிகளுக்கு செலுத்திய தொகையில் இருந்து 3 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஏன் விலையில் வேறுபாடு?
இரு தரப்பு போட்டிகள் உதாரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டிகள் நடைபெறுகிறது என வைத்துக்கொண்டால் ஸ்பான்சரின் பெயர் ஜெர்சியின் முன் பக்கம் பிரதானமாக நடைபெறும். இதன் மூலம் ஸ்பான்சரின் பெயர் தெளிவாக தெரியும். ஆனால் ஐசிசி நடத்தும் போட்டிகளுக்கு ஸ்பான்சரின் பெயர் டி-சர்ட்டின் கை பகுதியில் மட்டுமே இடம் பெறும். இதனால் ஸ்பான்சரின் பெயர் அவ்வளவு எளிதில் கண்ணுக்கு புலப்படாது. இதனால் தான் விலை மாறுபாடு இருக்கிறது.
இதையும் படிக்க : ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் யாதவ்!
புதிய ஸ்பான்சர்ஷிப் 130க்கும் மேற்பட்ட போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகள் மற்றும் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களும் அடங்கும். இதனை வைத்து கணக்கிடும்போது பிசிசிஐக்கு ரூ.400 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும். போட்டிகளின் அடிப்படையில் வரும் சலுகைகளின் அடிப்பைடையாக வைத்து பார்க்கும்போது இந்த தொகை ரூ.500 கோடி வரை உயரக் கூடும்.
ஸ்பான்சர் இல்லாமல் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகள்?
புதிய ஸ்பான்சருக்கான ஏலம் செப்டம்பர் 16, 2025 அன்று நடைபெறவுள்ளது. ஆனால் ஆசியக் கோப்பை போட்டிகள் வருகிற செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறவிருப்பதால் அதற்குள் புதிய ஸ்பான்சர் பெறுவது கடினம். இதனால் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் விளையாடும் என கூறப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.