Ashwin IPL Records: ஐபிஎல்லிலும் ஆஹா! ஓஹோ! அஸ்வின் படைத்த சாதனைகள் இவ்வளவா..?
Ravichandran Ashwin Retires: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்த 5 முக்கிய சாதனைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 27ம் தேதி ஐபிஎல் உள்பட அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் 2025ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். ஐபிஎல் 2026ம் (IPL 2026) ஆண்டு சீசனிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வை அறிவித்தார். இந்தநிலையில் ஐபிஎல் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த வித்தியாசமான சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 5வது வீரர்
ஐபிஎல் 2008 இல் தொடங்கிய நிலையில், ரவிசந்திரன் அஸ்வின் 2009ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். காயம் காரணமாக அவர் ஒரே ஒரு ஐபிஎல் சீசனில் (2017) மட்டுமே விளையாடவில்லை. ஐபிஎல் லீக் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5வது இடத்தில் உள்ளார். அஸ்வின் இதுவரை 221 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




ALSO READ: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பு!
சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர்
Ravichandran Ashwin — his impact in the IPL has been incredible. 🔥💪#Cricket #Ashwin #IPL #Chennai pic.twitter.com/SClUQdK0ER
— Sportskeeda (@Sportskeeda) August 27, 2025
ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல்லில் இதுவரை 16 சீசன்களில் விளையாடினார். இந்தக் காலகட்டத்தில், அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 சீசன்களில் விளையாடினார். சிஎஸ்கே அணிக்காக 8 சீசன்களில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்த 5வது வீரர்
ஐபிஎல் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்தார். ஐபிஎல்லில் 28 போட்டிகளில் கேப்டனாக இருந்த அஸ்வின் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டி வரலாற்றில் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். ஒரு கேப்டனாக, ஷேன் வார்ன், ஹார்டிக் பாண்ட்யா, பேட் கம்மின்ஸ் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருக்குப் பின்னால் அஸ்வின் 5வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல்லில் மூன்றாவது அதிக டாட் பால்கள்
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சிக்கனமான பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின், ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிக டாட் பால்களை வீசியுள்ளார். அஸ்வின் தனது ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 1,663 டாட் பால்களை வீசியுள்ளார். இவருக்கு முன்னால், சுனில் நரைன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
ALSO READ: சாஹலின் டி சர்ட் சர்ச்சை.. சமூக ஊடக ட்ரோலிங்! விவாகரத்துக்கு பின் மனம் திறந்த தனஸ்ரீ!
ஐபிஎல்லில் அதிக பந்துகள் வீசப்பட்டவை
ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை வீசிய வீரர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் இதுவரை 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,710 பந்துகளை வீசியுள்ளார். இதன் ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரையும் விட அதிக பந்துகளை வீசியவர் என்ற சாதனையை படைத்து அஸ்வின் தனது ஐபிஎல் வாழ்க்கையை முடித்தார்.