64வது சுப்ரதோ கோப்பை கால்பந்து போட்டிகள் அறிவிப்பு – எப்போது துவங்குகிறது தெரியுமா?
Subroto Cup Football Tournament : இந்தியாவில் 64வது சுப்ரதோ கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி அளவிலான இந்த போட்டியில் 3 பிரிவுகளின் கீழ் மாணவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். மேலும் சர்வதேச கால்பந்து அணிகளும் இதில் பங்கேற்கவிருக்கின்றன. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பள்ளி அளவிலான மிகப்பெரிய கால்பந்து (Foot Ball) போட்டியான 64வது சுப்ரதோ கோப்பை கால்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 19, 2025 அன்று துவங்குகிறது. இந்தியா முழுவதும் இருந்து 106 அணிகள் மற்றும் நான் சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன. இந்தப்போட்டிகள் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆண்கள், 17 வயதுகுட்பட்டோருக்கான ஜூனியர் பெண்கள், 15 வயதுகுட்பட்டோருக்கான சப் ஜூனியர் ஆண்கள் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிகள் செப்டம்பர் 25 வரை டெல்லி மற்றும் பெங்களூரு (Bengaluru) ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி, சுப்ரதோ முகர்ஜி விளையாட்டு கல்வி சங்கம் (SMSES) மற்றும் விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்துகின்றன. 1960 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டி, அந்நாளைய வான்படை மார்ஷல் சுப்ரதோ முகர்ஜியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. பள்ளி அளவிலான மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க : மோடி ஸ்டேடியத்திற்கு போட்டி.. பெங்களூருவில் உதயமாகும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்! எவ்வளவு பட்ஜெட் தெரியுமா..?




போட்டி அட்டவனை
இந்தப் போட்டியின் தொடக்க விழா ஆகஸ்ட் 19, 2025 அன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஜூனியர் பெண்கள் பிரிவுக்கான போட்டிகள் நடைபெறும். அதன் பிறகு செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 11, 2025 வரை பெங்களூருவில் 15 வயதுகுட்பட்டோருக்கான சப்-ஜூனியர் ஆண்கள் பரிவுக்கான போட்டிகள் நடைபெறும். மேலும் 17 வயதுகுட்பட்டோருக்கான ஜூனியர் ஆண்கள் பிரிவு போட்டிகள் செப்டம்பர் 25, 2025 அன்று வரை புதுடெல்லியில் நடைபெறும். மேலும் இந்த போட்டிகளின் நிறைவு விழா செப்டம்பர் 25, 2025 அன்று புது டெல்லியில் நடைபெறுகிறது.
போட்டி நடைபெறும் முக்கிய மைதானங்கள்
புதுடெல்லியில் உள்ள அம்பேத்கர் ஸ்டேடியம், தேஜாஸ் கால்பந்து மைதானம் சுப்ரதோ பார்க் கால்பந்து மைதானம், பிண்டோ பார்க் கால்பந்து மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கின்றன. அதே போல பெங்களூருவில் ஏர்ஃபோர்ஸ் ஸ்கூல் மைதானம், யேலஹங்காவில் உள்ள ஏர்ஃபோர்ஸ் ஸ்கூல் மைதானத்திலும் நடைபெறவிருக்கிறது.
இதையும் படிக்க : விராட் கோலி இப்படி பட்டவர்தான்.. பொதுவெளியில் போட்டுடைத்த எம்.எஸ்.தோனி..!
இந்த போட்டியில் சிறந்து விளங்கும் 7 வீரர்கள் இந்திய டைகர் திட்டத்தின் கீழ், ஜெர்மனி நாட்டில் கால்பந்து பயிற்சி பெற தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அணிகள் கலந்துகொள்ளவிருக்கின்றன. இந்த போட்டியில் திறமையாக விளையாடும் இளம் வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்களை சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாய்ப்புகள் உருவாக்கிதரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் சுப்ரதோ கோப்பை போட்டியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் களமிறங்க காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.