Vidyarambham: கல்வியின் தொடக்கம்.. வீட்டில் வித்யாரம்பம் செய்யும் வழிமுறைகள்!
Vijayadashami 2025: விஜயதசமி தீமையை நன்மை வென்ற நாளாக பார்க்கப்படுகிறது. இது புதிய தொடக்கங்களுக்கு உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கல்விக்கு வித்யாரம்பம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது. கோவில்களில் மட்டுமல்லாமல், வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த வித்யாரம்ப சடங்கை மேற்கொள்ளலாம். அதனைப் பற்றிக் காண்போம்.

நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விஜயதசமி விழா சிறப்பிக்கப்படுகிறது. விஜயதசமி என்பது தீமையை நன்மை வென்றதற்காக நாளாக மட்டுமல்லாமல் அனைவருக்கும் நேர்மறையான தொடக்கங்களுக்கான நேரமாகவும் பார்க்கப்படுகிறது. விஜயதசமி என்பதில் விஜய என்பது வெற்றியைக் குறிக்கும். அதனால் இந்நாளில் நாம் என்ன விஷயத்தை தொடங்கினாலும் அது இரட்டிப்பு பலன்களை காலத்துக்கும் அளிக்கும் என்பது ஐதீகமாகும். இது அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி கொண்ட நாளாகவும் பார்க்கப்படுவதால் நாடு முழுவதும் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி நாளில் நாம் மற்ற விஷயங்களை செய்கிறோமோ இல்லையோ கல்வி தொடர்பான நிகழ்வுகளை கண்டிப்பாக ஆரம்பிக்கிறோம். இந்நாளில் கோயில்களில் வித்யாரம்பம் என்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.
இது கல்வியின் புனித தொடக்கம் என பொருள்படும். கோயில்களில் சரஸ்வதி தேவி சன்னதி முன்பு அல்லது ஏதேனும் ஒரு கடவுளின் சன்னதி முன்பு சரஸ்வதி தேவி புகைப்படம் வழிபாடு செய்யப்பட்டு குழந்தைகள் தங்கள் கல்வியின் “அ” என்ற முதல் எழுத்தை அரிசியில் எழுதுவார்கள். சரஸ்வதி தேவி ஞானத்தின் தெய்வமாகக் கருதப்படுவதால், இந்த விழா அவளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது இந்த ஆண்டு, விஜயதசமி அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
பலருக்கும் கோயில்களில் மட்டுமா இந்த சடங்கை நடத்த வேண்டும்? வீட்டில் செய்யக்கூடாதா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால் சாஸ்திரத்தில் இதனை நாம் வீட்டிலும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
இதையும் படிங்க: பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி.. இந்த கோயில் தெரியுமா?
வீட்டில் வித்யாரம்பம் செய்யும் முறை
முதலில் குழந்தையின் வித்யாரம்பம் சடங்கை வீட்டிலேயே நடத்துவது, குழந்தையை கற்றல் உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான எளிய மற்றும் அழகான வழி என்பதை உணர வேண்டும். இது குழந்தையின் அறிவைப் பெறுவதற்கான முதல் படியைக் குறிக்கிறது.
இதற்கு சரஸ்வதி தேவியின் படம் அல்லது சிலை, அரிசி அல்லது சுத்தமான மணல் நிரப்பப்பட்ட தட்டு,மஞ்சள் மற்றும் குங்குமம், வெற்றிலை, ஒரு நோட்டுப் புத்தகம் அல்லது ஸ்லேட், பேனா அல்லது எழுது குச்சி, ஒரு விளக்கு, மஞ்சள் அல்லது வெள்ளை நிற துணி ஆகியவை தேவையான பொருட்களாகும்.
நீங்கள் வித்யாரம்பம் சடங்கு செய்யவிருக்கும் பகுதியை நன்கு சுத்தம் செய்து அங்கு சரஸ்வதி தேவியின் படம் அல்லது சிலையை ஒரு சிறிய மேஜை அல்லது மனைப்பலகையில் வைத்து அலங்கரிக்கவும். அதன்முன்னால் இலை விரித்தோ அல்லது தாம்பூல தட்டிலோ பழங்கள் , பூக்கள், வெற்றிலை பாக்குகள் வைக்க வேண்டும். தீபம் மற்றும் தூபம் ஏற்றி சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.
அப்போது சரஸ்வதி நமஸ்துப்யம், வரதே காமரூபிணி, வித்யாரம்பம் கரிஷ்யாமி, சித்தீர் பவது மே சதா என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். குழந்தையின் முன் சுத்தமான அரிசி அல்லது மணல் நிரப்பப்பட்ட தட்டை வைக்கவும். அதன்படி குழந்தையின் வலது கையின் ஆட்காட்டி விரலைப் பிடித்து தமிழின் முதல் எழுத்தான அ எழுதலாம். தொடர்ந்து ஓம் அல்லது குழந்தையின் பெயர் ஆகியவை எழுதலாம். அவை மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன.
இதையும் படிங்க: ஒரே இடத்தில் காசி, ராமேஸ்வரம் சென்ற பலன்.. இந்த கோயில் தெரியுமா?
எழுதி முடித்ததும் , குழந்தையின் நெற்றியில் ஒரு சந்தனம், குங்குமத்தால் திலகமிட வேண்டும். குழந்தைக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும். பின்னர் வீட்டின் பெரியவர்கள் குழந்தைக்கு ஆசி வழங்க வேண்டும். குழந்தையின் கைப்பிடித்து எழுதும் செயலை பெற்றோர், வீட்டில் மூத்தவர், அந்த வீட்டில் அதிகம் படித்தவர் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)