3 நாட்கள் கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு.. என்ன செய்ய வேண்டும்?
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. இது மூன்று நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பு வழிபாடாகும். மகாலட்சுமியை புகைப்படம், கலசம் வைத்து வீட்டிற்கு அழைத்து வந்து வழிபடலாம். வழிபாட்டு முறை, நேரம், மற்றும் மூன்று நாட்களுக்கான வழிபாட்டு விவரங்கள் பற்றிக் காணலாம்.

இந்துக்களின் மிகவும் விசேஷமான நாட்களில் ஒன்றாக அறியப்படுவது வரலட்சுமி நோன்பு ஆகும். இது வரலட்சுமி விரதம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தை பெண்கள் தான் மேற்கொள்கிறார்கள். தாங்கள் நீண்ட காலம் சுமங்கலிகளாக இருக்கவும், தன்னுடைய கணவர் நீண்ட ஆயுளுடன் வாழவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை இந்த வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் பெண்கள் வீட்டில் விரதம் இருந்து சிறப்பு வழிபாடுகளை நடத்துவார்கள். அப்படியாக 2025ம் ஆண்டு வரலட்சுமி நோன்பானது ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலனவர்கள் வரலட்சுமி விரதம் ஒருநாள் மட்டுமே வழிபாடு செய்ய வேண்டியது என நினைக்கிறார்கள். ஆனால் இது 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதத்தை திருமணம் ஆன பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும் கடைபிடிக்கலாம். திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதோடு தாங்களும் நீண்ட காலம் சுமங்கலியாக வாழ வேண்டும் என விரதம் இருப்பார்கள். திருமணமாகாத பெண்கள் தங்களுடைய எதிர்கால கணவன் மிகச்சிறந்த நபராக இருக்க வேண்டும், இல்வாழ்க்கை சிறக்க வேண்டும் எனவும் வழிபடுகிறார்கள்.
அதேசமயம் வீட்டில் செல்வ வளம் மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்க இன்னாளில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. வரலட்சுமி நோன்பு நாளில் நாம் மகாலட்சுமியை வழிபட வேண்டும். அவளை வீட்டிற்குள் அழைத்து வழிபாடு செய்து பலவிதமான வரங்களை கேட்டு வணங்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
Also Read: ஆகஸ்ட் 8ல் வரலட்சுமி நோன்பு.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
3 விதங்களில் மகாலட்சுமி வழிபாடு
வரலட்சுமி நோன்பு ஆகஸ்ட் 8ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்று மாலை ஆடி பௌர்ணமி திதியும் தொடங்குவதால் மிகச் சிறப்பான நாளாக பார்க்கப்படுகிறது. மூன்று நாட்கள் மூன்று வகைகளில் வரலட்சுமி விரத வழிபாட்டினை மேற்கொள்ளலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒன்று மகாலட்சுமியின் புகைப்படம் மட்டும் வைத்து வெள்ளிக்கிழமை வழிபடலாம். இரண்டாவதாக மகாலட்சுமி கலசம் வைத்து வழிபடலாம். மூன்றாவதாக வியாழக்கிழமை மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு சனிக்கிழமை புனர்பூஜை செய்து வழிபாட்டினை நிறைவு செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது.
வழிபாட்டு முறை
வழக்கம்போல வரலட்சுமி விரத தினத்தில் அதிகாலையில் இருந்து புனித நீராடி சுத்தமான ஆடை அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் அன்று காலை வழிபாட்டிற்கான நேரமான 9 மணி முதல் 10.20 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு பூக்கள் சூடி தீப, தூப ஆராதனை காட்ட வேண்டும். பின்னர் தெரிந்த மகாலட்சுமிக்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். ஏதேனும் ஒரு வகை இனிப்பை நைவேத்தியமாக வைத்து அம்பிகையை வழிபட வேண்டும்.
Also Read: சகல செல்வங்களையும் அளிக்கும் இந்த மகாலட்சுமி கோயில் தெரியுமா?
வீட்டு வாசலில் இருந்து மகாலட்சுமி வீட்டிற்குள் அழைக்கும் வழிபாட்டில் ஆரத்தி எடுத்து வீட்டின் உள் நிலைப்படியில் நின்று ஆராதனை காட்டி அம்பிகையே அழைக்க வேண்டும். அவள் நம் வீட்டு பூஜை அறையில் வந்து அமர்ந்ததாக மனதார நினைத்துக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் . மேலும் எங்கள் வீட்டில் அனைத்து விதமான வளங்களும் மகிழ்ச்சியும் நிம்மதியும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நீங்கள் வியாழக்கிழமை அம்பிகையே வீட்டிற்கு அழைப்பதாக இருந்தால் அன்றைய தினம் வெண்பொங்கல், சுண்டல் அல்லது ஏதாவது ஒரு நைவேத்தியத்தை வைத்து வழிபடலாம்.
மூன்றாவது நாளான ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை காலையில் வழிபாடு செய்த பிறகு, அந்த கலசம் அல்லது மகாலட்சுமி படத்தை எடுத்துச் சென்று வீட்டின் சமையலறையில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தின் மீது வைத்து அன்னலட்சுமி ஆக எப்போதும் வீட்டில் அன்ன குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வணங்க வேண்டும். பின்னர் அந்தப் படத்தை பூஜை அறையில் வைத்து விடலாம் கலசத்தில் நீர் நிரப்பியவர்கள் அதனை ஏதேனும் மரம் செடிகளில் ஊற்றி விடலாம்.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையின் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)